தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Trichy Siva Said There Is Much To Talk About; I Am Depressed

பேசுவதற்கு நிறைய உள்ளது; மன உளைச்சலில் இருக்கிறேன்-திருச்சி சிவா எம்.பி பூடகம்

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 16, 2023 01:06 PM IST

Trichy siva:நான் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் நான் இப்போது பேசுகிற மனநிலையில் இல்லை என திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார்.

திருச்சி சிவா செய்தியாளர்கள் சந்திப்பு
திருச்சி சிவா செய்தியாளர்கள் சந்திப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

பஹ்ரைன் நாட்டில் 178 நாடுகள் பங்கேற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்க நாடாளுமன்ற குழுவுடன் சென்று இப்போது தான் திரும்பி உள்ளேன். நடந்த சம்பவம் குறித்து சமூக வலை தளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன் இப்போது எதையும் பேசுகிற மன நிலையில் இல்லை. கடந்த காலத்திலும் நிறைய சோதனைகளை சந்தித்துள்ளேன். நான் அடிப்படையில் ஒரு முழுமையான அழுத்தமான கட்சிக்காரன். எனக்கு என்னை விட என் கட்சி முக்கியம் என்ற காரணத்தால் பலவற்றை நான் பெரிதுபடுத்தியதும் இல்லை. யாரிடமும் போய் புகார் சென்னதும் இல்லை. தனி மனிதனை விட இயக்கம் பெரிது என்ற தத்துவத்தின் அடிப்படையில் வளர்ந்தவன். இருப்பவன். அப்படி தான் இத்தனை நாட்களும் இருந்தேன். இப்போது நடந்துள்ள நிகழ்ச்சி மிகுந்த மன வேதனையை தந்திருக்கிறது. வீட்டில் உள்ள என்னுடைய உதவியாளரிடம் நான் பேச வேண்டும். நான் வீட்டில் இல்லாத போது அவர்கள் எல்லாம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். என்னோடிருந்த சில நண்பர்கள் 65 வயதானவர்கள் எல்லாம் காயம் பட்டிருக்கிறார்கள். அதனால் இப்போது நான் எதையும் பேசுகிற மன நிலையில் இல்லை என்றார்.

அப்போது செய்தியாளர்கள் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு நான் இப்போது பேசுகிற மன நிலையில் இல்லை. நான் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் நான் இப்போது பேசுகிற மனநிலையில் இல்லை. நான் மிகுந்த கலைப்பில் இருக்கிறேன். வயதான மூதாட்டி உள்ளிட்டோர் தாக்கப்பட்டுள்ளனர். நான் பிறகு பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமைச்சர் கே.என் நேரு, திருச்சி சிவா எம்.பி ஆகியோரின் ஆதரவாளர்கள் மோதல் விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் காவல் நிலையத்தில் புகுந்து அமைச்சர் கே.என் நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் திமுகவினர் ஐந்து பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட திமுகவினர் ஐந்து பேரும் காஜாமலை நீதிபதி குடியிருப்பில் திருச்சி நீதிமன்ற குற்றவியல் எண் இரண்டு நீதிபதி பாலாஜி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜி, மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் முத்து செல்வம், 55வது வட்டச் செயலாளர் ராமதாஸ் மற்றும் திருப்பதி ஆகிய ஐந்து பேருக்கும் வரும் மார்ச் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.

மோதல் சம்பவத்தில் வீடு மற்றும் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டது தொடர்ந்து பஹ்ரைன்லிருந்து திருச்சி சிவா எம்பி அவசரமாக தமிழகம் திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்