TOP 10 NEWS: காய்கறி விலை நிலவரம் முதல் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியது வரை - இன்றைய டாப் 10 நியூஸ்-top 10 news stories from vegetable price situation to cm stalin demanding the release of tamil nadu fishermen - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: காய்கறி விலை நிலவரம் முதல் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியது வரை - இன்றைய டாப் 10 நியூஸ்

TOP 10 NEWS: காய்கறி விலை நிலவரம் முதல் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியது வரை - இன்றைய டாப் 10 நியூஸ்

Marimuthu M HT Tamil
Sep 30, 2024 11:03 AM IST

TOP 10 NEWS: காய்கறி விலை நிலவரம் முதல் தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் வலியுறுத்தியது வரை, முக்கிய செய்திகளின் தொகுப்பினைக் காணலாம்.

TOP 10 NEWS: காய்கறி விலை நிலவரம் முதல் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியது வரை - இன்றைய டாப் 10 நியூஸ்
TOP 10 NEWS: காய்கறி விலை நிலவரம் முதல் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியது வரை - இன்றைய டாப் 10 நியூஸ்
  1. தமிழக மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் வலியுறுத்தல்:

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல் செய்துள்ளார்.

2. பல்லவன் விரைவு ரயிலில் பழுது:

காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த பல்லவன் விரைவு ரயில், பள்ளத்தூர் அருகில் வந்தபோது பிரேக் பழுதாகி புகை வந்ததால் பாதி வழியில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ரயிலின் கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டியில் பிரேக் பைண்டிங் பழுது ஏற்பட்டு, அதில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பழுது சரிசெய்யப்பட்டு ரயில் விரைவில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

3. தலைக்கவசம் அணியாததால் போன உயிர்:

சென்னை வேளச்சேரியில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற கௌரி சங்கர் (26) என்னும் இளைஞர் சாலை தடுப்புச் சுவர் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

4.தங்கத்தின் விலை நிலவரம்:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.56,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

5. சென்னையில் காய்கறி விலை நிலவரம்:

தமிழ்நாட்டில் காய்கறிகளின் விலையில் சிறுசிறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.50க்கும், சின்ன வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ.70-ம், உருளைக்கிழங்கு கிலோ ஒன்றுக்கு ரூ.40-க்கும் கேரட் கிலோ ஒன்றுக்கு ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தவிர, பீன்ஸ் கிலோ ஒன்றுக்கு ரூ.80க்கும், தேங்காய் ஒன்றுக்கு ரூ.53-க்கும், பீட்ரூட் கிலோ ஒன்றுக்கு ரூ.40க்கும் இஞ்சி கிலோ ஒன்றுக்கு ரூ.150க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், மாங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.100க்கும், வெண்டை கிலோ ஒன்றுக்கு ரூ.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

6. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி:

புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் புரட்டாசி மஹாளய அமாவாசையை ஒட்டி இன்று முதல் வரும் அக்டோபர் 3ஆம் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு இன்று முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். செப்டம்பர் 30ஆம் தேதியான இன்று புரட்டாசி மாதபிரதோஷம் கொண்டாடப்படுகிறது. மேலும் வரக்கூடிய புரட்டாசி மஹாளய அமாவாசை அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

7. மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

கோவை, நீலகிரி, தஞ்சை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசான மற்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8. லாரி தீப்பற்றி எரிப்பு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேட்டரி லோடுகளை ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. குறிப்பாக, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரிகள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. இதுதொடர்பாக போலீசார் அளித்த தகவலின்பேரில் பெருந்துறை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

9. கோவை அருகில் நகை மற்றும் பணம் திருட்டு:

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகை மற்றும் ரூ.5.32 லட்சம் பணம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன.

கிருத்திகா (27) என்பவர் கடந்த 27ம் தேதி குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்ற நிலையில், இன்று காலை அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தகவல் அறிந்த ஆலாந்துறை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

10. மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோள்:

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் ULOG 3 என்னும் மாணவர் குழு, ரூ.25ஆயிரம் செலவில் தயாரிக்கப்பட்ட 500 கிராம் எடைகொண்ட சிறிய ரக செயற்கைக்கோளை ஹீலியம் பலூன் உதவியுடன் வானில் பறக்கவிட்டனர். குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் முயற்சியாக இதை செய்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.