Top 10 News : கனமழை பெய்ய வாய்ப்பு.. ரூ.20 அபராதம் விதிக்கும் நடைமுறை அமல்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு, கொடைக்கானலில் ரூ.20 அபராதம் விதிக்கும் நடைமுறை அமல், தேஜஸ்வி யாதவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.

பிஹார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் ரூ.20 அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது வரை இன்றைய முக்கிய செய்திகளை பார்க்கலாம்.
தேஜஸ்வி யாதவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
பிஹார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “பிஹார் மாநிலத்தின் துடிப்புமிக்க இளம் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சமூகநீதி, மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றில் தாங்கள் கொண்டுள்ள பிடிப்பானது முற்போக்கான பிகாரைத் தொடர்ந்து ஊக்குவிக்கட்டும். நியாயமான, அனைவரையும் அரவணைத்துப் போற்றும் ஓர் எதிர்காலத்துக்காகப் பணியாற்றி வரும் தாங்கள் வலிமையோடும் வெற்றியோடும் திகழ வாழ்த்துகிறேன்!” எனப் பதிவிட்டுள்ளார்.
கனமழை பெய்ய வாய்ப்பு
வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.