Tamil Top 10 News: உதயநிதிக்கு இபிஎஸ் கண்டனம் முதல் ஒரே போஸ்ட்டில் 20 போட்டோ - டாப் 10 நியூஸ் இதோ..!
Tamil Top 10 News: உதயநிதிக்கு இபிஎஸ் கண்டனம், மிக கனமழை எச்சரிக்கை, இன்ஸ்டாகிராம் வெளியிட்ட அப்டேட் உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
ஏழை மக்கள் பணத்தில் கார் பந்தயம் தேவையா? - இபிஎஸ்
கார் பந்தயம் நடத்துவதற்காக மக்கள் பணத்தை திமுக அரசு ஊதாரித்தனமாக செலவிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டாக செய்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மக்கள் வரிப்பணத்தில் விளையாட்டு செய்கிறார் எனவும் கூறியுள்ளார்.
விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். பிரதமர் வெளியிட்ட 61 பயிர்களில் 109 ரகங்களில் 34 வயல் பயிர்கள் மற்றும் 27 தோட்டக்கலை பயிர்கள் அடங்கும். இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை
மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு.. மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற மாரத்தான் போட்டி..
உடல் பருமனால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் கோவை விஜிஎம் கேஸ்ட்ரோ மருத்துவமனை சார்பில், 4வது ஆண்டாக மாரத்தான் ஓட்டப் பந்தயம் கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 3,200 பேர் பங்கேற்றனர்.
கன மழை எச்சரிக்கை
கேரளாவில் பாலக்காடு, மலப்புரம் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், வயநாடு, திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
வன்முறை தொடராமல் இருக்கவே ராஜினாமா - ஷேக் ஹசீனா
மாணவர்களின் சடலங்களை வைத்து எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வர விரும்பினார்கள், ஆனால் நான் அதை அனுமதிக்கவில்லை. வங்கதேசத்தில் மேலும் வன்முறை தொடராமல் இருக்கவே ராஜினாமா செய்தேன். நான் ராஜினாமா செய்வதன் மூலம் மேலும் உயிரிழப்புகள் நிகழாமல் தடுத்தேன். நான் விரைவில் திரும்பி வருவேன். வங்கதேச எதிர்காலத்திற்காக நான் என்றென்றும் பிரார்த்தனை செய்வேன் என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு
ஜூலை 26ம் தேதி தொடங்கிய 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,717 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 1 வெள்ளி, 5 வெண்கலங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 71வது இடத்தில் உள்ளது. இப்போட்டியின் நிறைவு விழா இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது. 2 பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கர், ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தேசியக்கொடியை ஏந்தி செல்கின்றனர்.
வங்கதேசத்தில் இரண்டாவது நாளாக இந்துக்கள் போராட்டம்
வங்கதேசத்தில் தங்கள் வீடுகள் மற்றும் கோயில்கள் மீதான தாக்குதலை கண்டித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக சிறுபான்மையினரான இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்ஸ்டாகிராம் அப்டேட்
இன்ஸ்டாகிராம் கொண்டு வந்த புதிய அப்டேட்டில் போட்டோ மற்றும் வீடியோக்கள் பதிவிடுதலை 10-லிருந்து 20-ஆக உயர்த்தியுள்ளது மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
டாபிக்ஸ்