Tamil Top 10 News: தேவநாதனுக்கு சொந்தமான இடங்களுக்கு சீல் முதல்.. ராகுலின் வார்ரூம் தளபதி வரை - டாப் 10 நியூஸ் இதோ!-today afternoon top 10 news with tamil nadu national and world on august 18 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Top 10 News: தேவநாதனுக்கு சொந்தமான இடங்களுக்கு சீல் முதல்.. ராகுலின் வார்ரூம் தளபதி வரை - டாப் 10 நியூஸ் இதோ!

Tamil Top 10 News: தேவநாதனுக்கு சொந்தமான இடங்களுக்கு சீல் முதல்.. ராகுலின் வார்ரூம் தளபதி வரை - டாப் 10 நியூஸ் இதோ!

Karthikeyan S HT Tamil
Aug 18, 2024 01:34 PM IST

Tamil Top 10 News: தேவநாதனுக்கு சொந்தமான இடங்களுக்கு சீல் வைப்பு, கருணாநிதியை புகழ்ந்த பிரதமர் மோடி, ராகுலின் வார்ரூம் தளபதி சசிகாந்த் செந்தில் உள்பட டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Tamil Top 10 News: தேவநாதனுக்கு சொந்தமான இடங்களுக்கு சீல் முதல்.. ராகுலின் வார்ரூம் தளபதி வரை - டாப் 10 நியூஸ் இதோ!
Tamil Top 10 News: தேவநாதனுக்கு சொந்தமான இடங்களுக்கு சீல் முதல்.. ராகுலின் வார்ரூம் தளபதி வரை - டாப் 10 நியூஸ் இதோ!

பிரபல WIN TV நிறுவனத்திற்கு சீல்

நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக WIN TV உரிமையாளர் தேவநாதன் வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், ரூ.4 லட்சம் பணம், 2 கார்கள், ஹார்டு டிஸ்க்குகள், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. தொடர்ந்து, நிதி நிறுவனம், தேவநாதனின் தனியார் தொலைக்காட்சி (WIN TV) நிறுவனத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.

அழியாத முத்திரையை பதித்தவர் கருணாநிதி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழா குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில் பல தசாப்தங்களாக மக்களால் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சராக நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

அக்டோபர் 2 வரையும் தடை உத்தரவு

தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் 21 வரையும் ஆகஸ்ட் 30 முதல் அக்டோபர் 2 வரையும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பூலித்தேவன் 309 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி ஒண்டிவீரன் 253 வது வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிப்பு. இன்று முதல் ஆகஸ்ட் 21 வரைக்கும் ஆகஸ்ட் 30 முதல் அக்டோபர் 2 வரையும் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார்.

வங்கி நிதி மோசடிகள் 166% அதிகரிப்பு

வங்கி நிதி மோசடிகள் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 166% அதிகரித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கியின் (RBI) வருடாந்திர அறிக்கையை மேற்கோள்காட்டி அந்த செய்தி வெளியாகியுள்ளது. அதில், கடந்த 2022-2023ஆம் நிதியாண்டில் 13,564 வங்கி நிதி மோசடிகள் நடந்துள்ளதாகவும், அதே நேரத்தில் 2023- 2024ஆம் நிதியாண்டில் 36,075 வங்கி நிதி மோசடிகள் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மருத்துவர் கொலை வழக்கு விசாரணையில் அடுத்து என்ன?

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனையை சிபிஐ நடத்தவுள்ளது. இதற்காக நீதிமன்றத்தில், சிபிஐ அதிகாரிகள் சிறப்பு அனுமதி பெற்றதை அடுத்து, டெல்லியில் இருந்து 25 பேர் கொண்ட CFSL நிபுணர்கள் கொல்கத்தாவுக்கு வந்துள்ளனர். அவர்கள் நடக்கவிருக்கும் மனநிலை & குரல் பகுப்பாய்வு சோதனை மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மெசேஜ் வந்தால் உஷாராக இருங்கள்!

ஐ.டி ரீஃபண்ட்டுக்காக காத்திருப்பவர்களை குறிவைத்து, டிஜிட்டல் பண மோசடி கும்பல்கள் களமிறங்கி இருப்பதாக தெரிகிறது. ரீஃபண்ட் பெற ஒப்புதல் அளிப்பதாகக் கூறி, கிரெடிட் கார்டு போன்ற தகவலைக் கேட்டு மெசேஜ்களை சிலர் அனுப்புகின்றனர். அதில் உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்தால், கணக்கில் இருந்து பணத்தை உரியவருக்குத் தெரியாமல் திருடி விடுகின்றனர். எனவே, ஐ.டி பெயரில் வரும் மெசேஜ்களை ஓபன் செய்யாமல் இருங்கள்.

சுடுமண் முத்திரைகள் கண்டெடுப்பு

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் முத்திரைகள், விளக்கு, கல்பந்து, கல்லால் ஆன சில்வட்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை 7 மணியளவில் மருத்துவமனைகளின் அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரிகளுக்கு வந்த அந்த இமெயிலில், நோயாளிகளின் படுக்கைகளின் அடியிலும், கழிப்பறைகளிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

Mpox முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

தமிழகத்தில் இதுவரை யாரும் Mpox நோய் தொற்றால் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். Mpox தொற்றை சர்வதேச சுகாதார நெருக்கடியாக WHO அறிவித்ததாக கூறிய அவர், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார். மேலும், அறிகுறி ஏதேனும் இருந்தால் அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ராகுலின் 'வார் ரூம்' தளபதி சசிகாந்த் செந்தில் எம்பி

காங்கிரஸின் தேசிய வார்ரூம் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி., சசிகாந்த் செந்தில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் வாக்குறுதிகள், கொள்கை பிரசாரம் வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றிய அவர், மக்களின் மனநிலையை தெளிவாக கணிப்பதில் வல்லவராக கருதப்படுகிறார். ராகுலின் நம்பிக்கையை பெற்றதன் காரணமாக அவர் மீண்டும் வார்ரூம் தலைவராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.