Cyber criminals: சிபிஐ எனக் கூறி ஐ.டி.நிறுவன மூத்த அதிகாரியிடம் ரூ.3.70 கோடி பணம் பறிப்பு - நடந்தது என்ன?
சி.பி.ஐ., போலீஸ் எனக்கூறி ஐ.டி. நிறுவனத்தின் மூத்த அதிகாரியிடம் ரூ. 3.70 கோடி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), சி.பி.ஐ (CBI) மற்றும் மும்பை காவல்துறையின் அதிகாரி எனக் கூறி பெங்களூருவைச் சேர்ந்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரியிடம் ரூ.3.70 கோடி பணத்தை ஒரு கும்பல் சுருட்டியுள்ளது.
கர்நாடாகா மாநிலம், பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த இன்ஃபோசிஸ் நிறுவன மூத்த அதிகாரிக்கு கடந்த 21ஆம் தேதி செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், மும்பை வகோலா காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்திருக்கிறார். உங்கள் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் உங்களது செல்போன் எண்கள் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒரு நபர் தொடர்பு கொண்டு, இன்ஃபோசிஸ் ஊழியர் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம்கார்டு எண் மூலம் சட்ட விரோத விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கு சம்பந்தப்பட்ட எண் தன்னுடையது கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். இதற்கு டிராய் ஊழியர் என பேசியவர், அந்த எண் உங்களது ஆதார் கார்டை போலியாக வைத்து பெறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதனை கேட்டு இன்ஃபோசிஸ் ஊழியர் அதிர்ச்சி அடைந்தார்.
