தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /   Tn Bjp Leader Annamalai Tweet About Case Registered

Annamalai: 24 மணி நேரம் டைம்.. முடிந்தால் என் மீது கை வையுங்கள்- அண்ணாமலை சவால்!

Divya Sekar HT Tamil
Mar 05, 2023 01:02 PM IST

சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட் செய்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை

ட்ரெண்டிங் செய்திகள்

வதந்தி பரப்புதல் வன்முறையை தூண்டுதல், மத ரீதியான பிரிவினையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது காவல்துறை வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அண்ணாமலை வெளிட்டிருந்த அந்த அறிக்கையில், ”தமிழக பாஜக சார்பாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பாஜகவினர், வடமாநில சகோதரர்களைச் சந்தித்து, இந்த பொய்ப் பிரச்சாரங்களை எடுத்துக் கூறி, அவர்கள் பாதுகாப்புக்கு, தமிழக பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது. தமிழகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித் தொழில் மற்றும் சேவைத் துறை மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளில், வட இந்தியத் தொழிலாளர்களின் பெரும் பங்கினை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும், வெறுப்பு பிரச்சாரத்தையும், தமிழர்களாகிய நாங்கள் ஆதரிக்கவில்லை.

தமிழகத்தில் வட இந்திய சகோதர சகோதரிகள் தாக்கப்படுவதாக பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதை, தமிழக பாஜக கடுமையாக எதிர்க்கிறது. இது போன்ற பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

திமுக ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கைகளில் தொடங்கிய இந்த வெறுப்புப் பிரச்சாரம், தற்போது, ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது. இந்தி எதிர்ப்பு என்ற பெயரில், வட மாநில மக்களை ஏளனமாகப் பேசுவதும், அவர்கள் செய்யும் தொழில்களை அவமானப்படுத்துவதுமான திமுக கலாச்சாரத்தின் விளைவுதான் இன்றைய நிலைக்குக் காரணம்.

திமுக ஆரம்பித்த காலத்திலிருந்து, தற்போது வரை, ஏதோ ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை விதைத்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளில், திமுக எம்பிக்கள், அமைச்சர்கள் பேசிய ஏளனப் பேச்சுக்கள் எத்தனை?

திமுக எம்பி திரு தயாநிதி மாறன், வட மாநிலத் தொழிலாளர்களை, எங்கள் வீட்டு வேலை செய்பவர்கள், கூர்க்கா வேலை செய்பவர்கள், கட்டிட வேலை செய்பவர்கள் என்றெல்லாம் அவர்கள் செய்யும் தொழில்களை அவமானப்படுத்தி மேடையில் பேசினார். அமைச்சர் திரு பொன்முடி, வட இந்தியர்கள் தமிழகத் தெருக்களில் பானிபூரி விற்பவர்கள் என்றார். அமைச்சர் திரு மூர்த்தி, வட மாநில வணிகர்களை தமிழகத்தில் தொழில் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று வெறுப்புணர்வைத் தூண்டினார்.

திமுக கூட்டணிக் கட்சித் தலைவர் திரு திருமாவளவன், “வட மாநில ஆட்களை இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது” என்று மிரட்டல் தொனியில் பேசினார். அவர் கட்சியான ஈரோடு கிழக்கு மாவட்ட விசிகவினரும், திமுகவின் மற்றொரு கூட்டணிக் கட்சித் தலைவர் திரு வேல்முருகன் உள்ளிட்டோரும், “வட மாநிலத் தொழிலாளர்களை வெளியேற்று” என்று போஸ்டர் ஒட்டி போராட்டம் அறிவிக்கிறார்கள்.

வட இந்திய சகோதரர்கள் மேல் இத்தனை வன்மப் பிரச்சாரம் நடந்தும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இவர்களைக் கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஒரு பொறுப்புள்ள முதலமைச்சராக, ஒரு சாரார் மீது தமிழகத்தில் கட்டமைக்கப்பட்ட வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வடமாநில சகோதரர்கள் மேல் தொடர்ந்து நடக்கும் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுத்து நிறுத்தி, இந்த அச்சத்தைக் களைவது திமுகவின் பொறுப்பு. தமிழக பாஜக சார்பாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பாஜகவினர், வடமாநில சகோதரர்களைச் சந்தித்து, இந்த பொய்ப் பிரச்சாரங்களை எடுத்துக் கூறி, அவர்கள் பாதுகாப்புக்கு, தமிழக பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்து வருகின்றனர். 

இனிமேலாவது, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தன் கட்சிக்காரர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிக்காரர்கள், வடமாநில சகோதரர்கள் மேல் தொடரும் வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுத்து, தமிழகத்தின் மாண்பைக் காப்பார் என்று நம்புகிறேன்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையில் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் வெளியிட்டதாக  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்,”வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன்.

அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன்.

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்!”என பதிவிட்டுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்