TN Assembly 2024: ’வீராணம் ஏரியை தூர்வார 270 கோடி வேணும்! அவாள் ஆட்சியில தூக்கிட்டாங்க!’ துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை!
TN Assembly 2024 Live: வீராணம் ஏரியை தூர்வார வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. எங்கள் முந்தைய ஆட்சியில் கூட வீராணம் ஏரியை தூர்வாரினோம். அந்த ஏரியை தூர்வாரா 270 கோடி ரூபாய் தேவைப்படுகின்றது. எனவே அரசின் நிதிநிலைக்கு ஏற்ப வீராணம் ஏரி தூர்வாரப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வீராணம் ஏரியை தூர்வார 270 கோடி ரூபாய் தேவைப்படுகின்றது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜூன் 29ஆம் தேதி இக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மானியக் கோரிக்கை விவாதம்
இன்றைய தினம் சிறு குறு நடுத்தர தொழில்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை, மதுவிலக்கு, காவல்துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறுகின்றது. இந்த விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பதில் அளித்து பேசி புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.
திருமுட்டம் காவிரி டெல்டாவில் இணைக்கப்படுமா?
கேள்வி நேரத்தின் போது காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திருமுட்டம் பாசன பகுதி முழுவதும் வெள்ளாற்றில் உள்ள பொளந்துறை அணைக்கட்டின் பாசனம் ஆகும். இதன் சில பகுதிகளில் உள்ள வடிகால் மட்டுமே வீராணம் ஏரியின் எதிர்கரையில் அமைந்து காவிரி டெல்டாவில் அமைகின்றது.எனவே தொழில் நுட்ப ஆய்வுக்கு பின் இந்த பகுதியை காவிரி டெல்டாவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய, சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், வீராணம் ஏரியின் மேற்கு பாசன பகுதியாக திருமுட்டம் பகுதி உள்ளது. அண்ணா முதல்வராகவும், கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்த காலத்தில் திருமுட்டம் பகுதி காவிரி டெல்டா பாசன பகுதியில் இணைக்கப்பட்டது. அதற்கு பிறகு கடந்த அதிமுக ஆட்சியில் 2012இல் அரசியல் காழ்புணர்ச்சியால், அந்த பகுதி காவிரி டெல்டாவில் இருந்து தவிர்க்கப்பட்டுவிட்டது. திருமுட்டம் பகுதியை மீண்டும் டெல்டா பகுதி உடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளிக்கையில், ஒரு காலத்தில் காட்டுமன்னார் கோயில் தாலுக்கா டெல்டா பகுதியாக இருந்தது. ஆனால் 2017இல் ’அவாள்’ ஆட்சியில் திருமுட்டம் தாலுகா உருவாக்கப்பட்டு, காவிரி டெல்டாவில் இல்லை. இதனால் குறுவை தொகுப்பு அந்த விவசாயிகளுக்கு கிடைப்பது இல்லை. வீராணம் ஏரியின் 6 மதகுகள் மூலம் திருமுட்டம் பகுதி பாசனம் பெறுகிறது. திருமுட்டம் பகுதியை டெல்டா பாசனத்தில் இணைக்க அரசு ஏற்று உள்ளது. தொழில் நுட்ப ஆய்வுக்குழு அதற்காக போட்டு உள்ளோம். விரைவில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
வீராணம் ஏரி தூர்வாரப்படுமா?
இதனை தொடர்ந்து சிந்தனை செல்வன், தலைநகரின் தாகம் தீர்க்கும் வீராணம் ஏரியை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய, அமைச்சர் துரைமுருகன், வீராணம் ஏரியை தூர்வார வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. எங்கள் முந்தைய ஆட்சியில் கூட வீராணம் ஏரியை தூர்வாரினோம். அந்த ஏரியை தூர்வாரா 270 கோடி ரூபாய் தேவைப்படுகின்றது. எனவே அரசின் நிதிநிலைக்கு ஏற்ப வீராணம் ஏரி தூர்வாரப்படும் என தெரிவித்தார்.