Veeranam Lake : சென்னைக்குவரும் வீராணம் நீரில் நச்சு பாக்டீரியா கிருமி – சென்னை பல்கலை. ஆராய்ச்சியில் அதிர்ச்சி!
Veeranam Lake : சென்னைக்குவரும் வீராணம் நீரில் நச்சு பாக்டீரியா கிருமி – சென்னை பல்கலை. ஆராய்ச்சியில் அதிர்ச்சி!
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடந்து வரும்வேளையில், சென்னைக்கு வரும் வீராணம் ஏரி குடிநீரில் பாக்டீரியா விஷம் (Cyanotoxin from cyanobacteria) அதிகம் இருப்பதைை ஜனவரி 2ம் தேதி 2024ம் ஆண்டு Springer Nature Environmental Sciences, Europe, ஆய்வுக் கட்டுரையில், சென்னை பல்கலைக் கழகம் மற்றும் பிரெசிடன்சி கல்லூரி ஆய்வாளர்கள் கண்டறிந்து வெளியிட்டுள்ளனர்.
ADDA-ELISA பரிசோதனையில் வீராணம் ஏரிநீரில் சையனோடாக்சின் அளவு, உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த 1 மைக்ரோகிராம்/லிட்டர் என இருக்க வேண்டும் என்பதைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Leptolyngbya, Desertifilum சைனோபாக்டீரியா மூலம் வெளியாகும் விஷத்தின் அளவு முறையே 17.22 மைக்ரோகிராம்/லிட்டர், 19.38 மைக்ரோகிராம்/லிட்டர் என அதிகமாக உள்ளது.
பொதுவாக சைனோபாக்டீரியாக்களிடமிருந்து மைக்ரோசிஸ்டின் சிலிண்ட்ரோஸ்பெர்மோசின், அனடாக்கசின்-ஏ போன்ற நச்சுக்கள் வெளியாகும்.
10 ம் நூற்றாண்டில் சோழர்களால் உருவாக்கப்பட்ட வீராணம் ஏரியின் 16 கி.மீ. தொலைவிற்குள் 6 இடங்களில் 2018 ஆகஸ்ட் மற்றும் 2019 மார்ச் ஆகிய காலங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்டின் 3 முக்கிய பருவங்களில் வீராணம் ஏரியின் நீரில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விஷத்தை வெளியிடும் 10 சைனோபாக்டீரியாக்கள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
சைனோபாக்டீரியா அதிகமாக வளரக் காரணம் -
வயல்களில் இடப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ் கலந்த உரங்கள் ஏரிநீரை அதிகம் வந்தடைவதாலும் (அது தடுக்கப்பட வேண்டும்.)
சட்டப்படி முறையான சிகிச்சை அளிக்கப்படாமல் ஆலைக்கழிவுகள் வீராணம் ஏரியை வந்தடைவதாலும் இந்த மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சைனோபாக்டீரியாவை கண்டறிந்த ஆய்வாளர்கள் அதிலிருந்து உருவாகும் விஷத்தை பிரித்தெடுத்து மீன்கள் மத்தியில் ஆய்வு செய்ததில் மீன்களின் ஈரல் பாதிப்பு ஏற்படுவதும் தெளிவாக தெரியவந்துள்ளது.
இந்த விஷங்களால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் -
தோலில் சிவப்புதன்மை (அரிப்புடன், சிகிச்சையில் தோலை சுத்த நீரால் நன்கு கழுவுவது வலியுறுத்தப்பட வேண்டும்) நுரையீரல் பாதிப்பு, அஜீரணக் கோளாறு, ஈரல், சிறுநீரகம், நரம்பு மண்டல பாதிப்பு, மிக மோசமானால் இறப்பு கூட ஏற்படும் வாய்ப்புள்ளது.
சைனோபாக்டீரியாவின் அளவு மிதமிஞ்சிப் போனால், குடிநீர் கலங்கலாக மாறி, இதனால் ஒளிச்சேர்க்கை தடைப்பட்டு, நீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து மீன்கள் இறப்பதும் நடக்க முடியும். இதுகுறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா எனத் தெரியவில்லை. மீன்வளம் குறைந்துள்ளதா என்பது நிச்சயம் ஆராயப்பட வேண்டும்.
மேலும், நீரை குடிக்கும், செல்லப்பிராணிகளும், கால்நடைகளும் பெரும் பாதிப்பிற்கு ஆளாக முடியும் என்பது இருக்க, அதுகுறித்தும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதா? எனத் தெரியவில்லை. அதுவும் நடக்க வேண்டும்.
பிரச்னைக்கு தீர்வு -
ஏரிகளுக்கு அருகில் தேவையான மரங்கள் மற்றும் செடிகளை நட்டு நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்றவற்றை தாவரங்கள் மூலம் வடிகட்டி பிரித்தெடுக்க வேண்டும்.
வயலில் இருந்து உரங்கள் (நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ்) ஏரி நீரை அடைவது நிறுத்தபட வேண்டும்.
ஏரிக்கரைகளில் பயனளிக்கும் புற்களை வளர்த்து அதன் மூலம் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
ஏரி நீர் நன்கு தேங்காமல் ஓடுவதை உறுதிபடுத்த வேண்டும்.
ஏரி நீரின் தரத்தை அடிக்கடி அளப்பது, சைனோபாக்டீரியாக்களின் வளர்ச்சியை கண்காணிப்பது, அவற்றிலிருந்து ஏரி நீரில் விஷம் அதிகம் உற்பத்தியாகிறதா? என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
சிகிச்சையளிக்கப்படாத ஆலைக் கழிவுகள் ஏரிநீரில் கலப்பது தடுக்கப்பட வேண்டும். தவறிழைக்கும் தொழில் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டனை அல்லது அபராதம் கடுமையாக விதிக்கப்படவேண்டும்.
2ம் உலகப்போரின்போது ஹிட்லர் பால்டிக் எதிரி நாடுகளின் ஏரிகள், நீர்நிலைகளில் சைனோபாக்டீரியாவை திட்டமிட்டே கலந்து அதன் மூலம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, குடிநீர் பிரச்னையை ஏற்படுத்தியது வராலாற்று நிகழ்வாக உள்ளது.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொழிற்நிறுவனங்கள் (இந்திய மற்றும் அந்நிய முதலீடு) தேவை தான்.
ஆனால் சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பது முக்கியமல்லவா? மக்கள் நலன் காக்கப்பட வேண்டும் அல்லவா? சென்னை மக்களுக்கான குடிநீரிலே விஷம் இருப்பது, சட்ட விதிமுறைகள் அல்லது மக்கள் நலன் தமிழகத்தில் காக்கப்படுவது குறித்து பெருத்த கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.
மேலும் மக்கள் நலனை விட தொழிற்நிறுவனங்களின் வளர்ச்சி மட்டுமே தமிழக அரசிற்கு முன்னுரிமையாக உள்ளதோ என்ற அச்சமும் உள்ளது. (முதலீட்டார்கள் மாநாடு நடக்கும் சென்னை மக்களுக்கே இந்த கதி என்றால்,மற்ற மக்களின் நிலை?)
தமிழக அரசு விரைந்து இந்தப் பிரச்னைக்கு தீர்வைக் காண முன்வர வேண்டும். சுற்றுச்சுழலைக் காத்து மக்களின் சுகாதாரத்தை உறுதிபடுத்த வேண்டும். தொழிற்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.
தமிழக அரசு செவிசாய்க்குமா என மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
டாபிக்ஸ்