TN Assembly 2024: தென் சென்னையை போன்றே வட சென்னையில் நூற்றாண்டு நூலகம் வருகிறதா? அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன பதில்!
TN Assembly 2024 Live: சென்னையில் உள்ள நூற்றாண்டு நூலகம் தென் சென்னையில் உள்ளது. அது வடசென்னையில் இருந்து மிகவும் தூரம். வட சென்னையில் மாதவரம் போன்ற பகுதியில் இது போன்ற நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க அரசு முன் வருமா? என கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜூன் 29ஆம் தேதி இக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மானியக் கோரிக்கை விவாதம்
இன்றைய தினம் சிறு குறு நடுத்தர தொழில்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை, மதுவிலக்கு, காவல்துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறுகின்றது. இந்த விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பதில் அளித்து பேசி புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.
வடசென்னையில் போட்டித் தேர்வு பயிற்சி மையம்
கேள்வி நேரத்தின் போது பேசிய மாதவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், சென்னையில் 2 போட்டித் தேர்வு பயிற்சி மையம், கோவை, மதுரை, சேலத்தில் தலா ஒரு பயிற்சி மையங்கள் உள்ளன. சென்னையில் 85 லட்சம் மக்கள் உள்ளனர். ஏழை எளிய மக்கள் வசிக்கும் மாதவரம் பகுதியில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னையில் ஏற்கெனவே வண்ணாரப்பேட்டை தியாகராயர் கல்லூரியில் ஒரு பயிற்சி மையமும், நந்தனத்தில் ஒரு பயிற்சி மையமும் உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் குடிமை பணி தேர்வுகளுக்கான மையமும் இயங்கி வருகின்றது. நூலகங்களிலும் கூட போட்டித் தேர்வு பயிற்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் இதுபோன்ற பயிற்சி மையங்கள் உள்ளது. எதிர்காலத் தேவையை பொறுத்து கோரிக்கையை அரசு கவனிக்கும் என கூறினார்.
வட சென்னையில் நூற்றாண்டு நூலகம்
இதனை தொடர்ந்து பேசிய, மாதவரம் சுதர்சனம், சென்னையில் உள்ள நூற்றாண்டு நூலகம் தென் சென்னையில் உள்ளது. அது வடசென்னையில் இருந்து மிகவும் தூரம். வட சென்னையில் மாதவரம் போன்ற பகுதியில் இது போன்ற நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க அரசு முன் வருமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய, அமைச்சர் தங்கம் தென்னரசு, வட சென்னை வளர்ச்சியில் முதலமைச்சர் தலைமையிலான அரசு தனி கவனம் செலுத்தி வருகின்றது. எனவேதான் வட சென்னை வளர்ச்சிக்கான தனித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சென்னை, மதுரை மட்டுமின்றி, கோவை, திருச்சி, சேலத்தில் நூலகம் மற்றும் அறிவுசார் மையங்களை முதல்வர் அறிவித்து உள்ளார். முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று, எதிர்காலத்தில் உரிய வகையில் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.