TN Assembly: திருச்சியில் உலகத் தரத்தில் நூலகம், அறிவுசார் மையம்! முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிப்பு
Tamil Nadu Assembly 2024 Live: காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்பதை இந்த அவைக்கு மட்டற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜூன் 29ஆம் தேதி இக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
விதி எண் 110-இன் கீழ் புதிய அறிவிப்பு
இது தொடர்பாக விதி எண் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர், பேசுகையில், திராவிட இயக்கம் என்பது மாபெரும் அறிவியக்கம். அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் தலைமை நிலையத்துக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘அறிவகம்’ என்று பெயர்ச் சூட்டினார்.
தற்போதைய தலைமை நிலையத்துக்கு ‘அறிவாலயம்’ என்று பெயர்ச் சூட்டினார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். (மேசையைத் தட்டும் ஒலி) தி.மு.கழகம் எங்கெல்லாம் கிளை பரப்பியதோ, அங்கெல்லாம் படிப்பகங்கள் உருவாக்கப்பட்டன.
நூற்றாண்டு நூலகங்கள்
அரசியல் இயக்கமாக மட்டுமல்லாமல், தமிழ் இலக்கிய இயக்கமாகவும் வளர்ந்தது. வாசிப்பதற்கும் சுவாசிப்பதற்கும் வேறுபாடு காணமுடியாத வாழ்க்கை வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். பாதி வரை படித்த புத்தகங்களின் மீதியைப் படிப்பதற்கு ஏதுவாக அறுவை சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அந்த பேரறிஞரின் நூற்றாண்டைக் கொண்டாடி மகிழ்ந்த தலைவர் கலைஞர், கோட்டூர்புரத்தில் எட்டு மாடிகள் கொண்ட, ஒரே நேரத்தில் 1200 பேர் உட்கார்ந்து படிக்கிற வகையில், மூன்று இலட்சத்து முப்பத்து மூன்றாயிரம் சதுர அடிகள் கொண்ட நூலகத்தை உருவாக்கி, அதற்கு ‘அண்ணா நூற்றாண்டு நூலகம்’ என்ற பெயரையும் சூட்டி மகிழ்ந்தார்.
கோவை நூலக பணிகள் விரைவில் தொடங்கும்
அந்தவகையில், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வசிப்பவர்களும் நூலகங்கள் மூலம் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், சங்கம் வைத்து மாத்தமிழ் வளர்த்த மதுரையில் 15-7-2023 அன்று கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டு, என்னால் திறந்து வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர்வாழ் பொது மக்களுக்கும் இளைய தலைமுறைக்கும் பயன்படும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம், முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தோம். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
திருச்சியில் உலகத் தர நூலகம்
அந்த வரிசையில் காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்பதை இந்த அவைக்கு மட்டற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக் களஞ்சியமாக அது அமைந்திடும். தினந்தோறும் திட்டங்கள் தீட்டும் நாளாக, விடியும் நாளாக, விடியல் தரும் நாளாக உருவாக்கி வருகிறோம் என்பதைத் தெரிவித்து அமைகிறேன்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9