NEET exam: தேசிய அளவில் நீட் தேர்வை அகற்ற வேண்டும்! பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம்!
TN Assembly 2024 Live: நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற நாம் எடுத்த முயற்சிகளை வெற்றியடைய செய்யவும், தேசிய அளவில் நீட் தேர்வை அறவே அகற்றிடவும் தேவையான முன்னெடுப்பாக, இந்த மாமன்றம் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் கூறி உள்ளார்.

நீட் தேர்வை அகற்ற கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.
நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்த கலைஞர்
இந்த தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவத் துறையிலும், பல்வேறு பொது சுகாதாரக் குறியீடுகளிலும் நாட்டிற்கே முன்னோடியாக நம்முடைய தமிழ்நாடு திகழ்கிறது. பல ஆண்டுகளாக நமது தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை முறைதான் இந்தச் சாதனைகளுக்கு அடிப்படையாக விளங்குகிறது. முனைவர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் தொழிற்பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை இரத்து செய்து இந்தச் சாதனைகளுக்கு அடித்தளம் அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
பள்ளிக்கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில், சமூகநீதியையும், அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கு சமவாய்ப்பையும் உறுதிசெய்யக்கூடிய முன்னோடி சேர்க்கை முறையை நாம் பின்பற்றி வருகிறோம். இந்த முறையால்தான் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகவும், அனைத்துப் பகுதிகளுக்கும் சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கிடவும் முடிந்தது.