தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cm Stalin : இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! காலை உணவு திட்டத்தை விமர்சித்த செய்தித்தாள்.. முதல்வர் கடும் கண்டனம்!

CM Stalin : இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! காலை உணவு திட்டத்தை விமர்சித்த செய்தித்தாள்.. முதல்வர் கடும் கண்டனம்!

Divya Sekar HT Tamil
Aug 31, 2023 11:13 AM IST

காலை உணவு திட்டத்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட செய்தித்தாளுக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவுத்திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த காலை உணவு திட்டம் கடந்த 25ஆம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. தமிழகத்தில் 31,008 பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டத்தால் சுமார் 18 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்

இந்த சூழலில் பிரபல நாளிதழ் ஒன்றில் காலை உணவு திட்டம் ’மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது’ என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ’மாணவர்கள் எல்லோருக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது. வீட்டில் சாப்பிட்டு வரும் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும் அங்கும் சாப்பிடுகின்றனர். இதனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் இயற்கை உபாதைக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது’ என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காலை உணவு திட்டத்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட செய்தித்தாளுக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ”உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம். 'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.

நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!” என தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்