Senthil Balaji Vs ED: ’செந்தில் பாலாஜி வெளியே வருவாரா?’ ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு!
”சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 7 முறைக்கு மேல் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது”
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 7 முறைக்கு மேல் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சென்னை முன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு நடந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதங்களை முன் வைத்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்படும்போது அவருக்கு உடல் நிலை சரியில்லை. ஏற்கெனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. ஆட்கொணர்வு மனுவில் வைக்கப்பட்ட வாதங்களைதான் ஜாமீன் மனு மீதும் அமலாக்கத்துறை தற்போதும் வைக்கிறது.
செந்தில் பாலாஜிக்கு சிறையில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க முடியும் என அமலாக்கத்துறை சொல்கிறது. ஆனால் தற்போதைய நிலையில் சிறையில் சிகிச்சை பெறும் நிலையில் செந்தில் பாலாஜி இல்லை. நீதிமன்றமே ஒரு மருத்துவரை நியமனம் செய்து செந்தில் பாலாஜி உடல் நிலையை ஆய்வு செய்து அதற்கு பிறகு கூட அவரது ஜாமீன் மனு மீது முடிவு எடுக்கலாம் என்று வாதிட்டார்.
பின்னர், அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜென்ரல் சுந்தரேசன், சிறை மருத்துவமனை அல்லது நீதிமன்ற காவலில் அரசு மருத்துவமனையில் சிறைவாசிக்கு சிகிச்சை அளிக்கலாம் என சட்ட விதிகள் உள்ளது.
உடல்நிலையை காரணம்காட்டி ஜாமீன் தரக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளதாக வாதிட்டார்.
மேலும், ”ஒரு இடத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் செந்தில் பாலாஜியால் உட்காரவோ, நிற்கவோ முடிவில்லை” என்று வாதம் செய்கிறார்கள். ஆனால் அவரை 30 நிமிடங்களுக்கு நிற்கவோ உட்காரவோ யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இது போன்ற வாதங்களை நீதிபதி ஏற்க கூடாது எனக் கூறி வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்த நிலையில் ஜாமீன் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் அளிக்கிறது.