TASMAC Revenue: ’மது விற்பனை 45 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியது! கடந்த ஆண்டை விட 1,734 கோடி அதிகம்'
TASMAC Revenue: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான விவாதத்தில் அமைச்சர் முத்துசாமி கேள்விகளுக்கு பதில் அளித்து உரையாற்றினார். அப்போது அரசு சார்பில் வெளியிடப்பட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் டாஸ்மாக் வருவாய் குறித்த புள்ளிவிவரங்கள் இடம்பெற்று உள்ளது
தமிழ்நாட்டில் கடந்த 2023-24ஆம் ஆண்டில் 45 ஆயிரத்து 855 கோடி ரூபாய் டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 1,734.54 கோடி அதிகம் ஆகும்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கி வரும் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நேற்றைய தினம் காலை 10 மணிக்கு கூடிய சட்டப் பேரவையில் மறைந்த எம்.எல்.ஏக்களுக்கும், குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்கள், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று முதல் மானியக் கோரிக்கைகள் தொடக்கம்
இந்த நிலையில், இன்றைய தினம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை கூடியது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விவாதிக்க கோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம் எழுப்பிய நிலையில், சபாநாயகர் அவர்கள் உத்தரவின்படி வெளியேற்றப்பட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “கள்ளச்சாராயம் விற்பனையில் திமுகவுக்கு தொடர்பு உள்ளது” என குற்றம்சாட்டி இருந்தார்.
கள்ளக்குறிச்சி மரணம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில், “இந்தச் சம்பவம் பற்றிய தகவல் எனக்குத் தெரிந்தவுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான மாண்புமிகு திரு. எ.வ.வேலு மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் ஆகியோரை உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டேன். அவர்களும் 19-ஆம் தேதி இரவே அங்கு நேரில் உள்துறைச் செயலாளரையும், டி.ஜி.பி.யையும் நேரில் செல்ல உத்தரவிட்டிருந்தேன். அவர்களை இரண்டொரு நாளில் விசாரணை அறிக்கையைக் கொடுக்கச் சொல்லி இருக்கிறேன். அந்த அறிக்கை கிடைத்ததும் அதன் மீதான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவேன் என உறுதி அளிக்கிறேன்.” என கூறி இருந்தார்.
பின்னர் நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறைகள் மீதான மானியக்கோரிக்கைகள் நடந்து முடிந்தன.
டாஸ்மாக் வருவாய் 45 ஆயிரத்து 855 ஆயிரம் கோடி
பிற்பகலில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான விவாதத்தில் அமைச்சர் முத்துசாமி கேள்விகளுக்கு பதில் அளித்து உரையாற்றினார். அப்போது அரசு சார்பில் வெளியிடப்பட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தமிழ்நாட்டில் கடந்த 2023-24ஆம் ஆண்டில் 45 ஆயிரத்து 855 கோடி ரூபாய் டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 1,734.54 கோடி அதிகம் ஆகும்.