தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tasmac: கூடுதல் விலைக்கு மது விற்றால் சஸ்பெண்ட்.. டாஸ்மாக் நிர்வாகம் கடும் எச்சரிக்கை!

Tasmac: கூடுதல் விலைக்கு மது விற்றால் சஸ்பெண்ட்.. டாஸ்மாக் நிர்வாகம் கடும் எச்சரிக்கை!

Karthikeyan S HT Tamil
Jul 19, 2023 12:28 PM IST

டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மது விற்பனை
டாஸ்மாக் மது விற்பனை

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், கூலிங் பீர் என ஒவ்வொரு விதமான மது பாட்டில்களுக்கும் கூடுதலாக ஒரு குறிப்பிட்டத் தொகை வசூலிக்கப்படுவதாக மது பிரியர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக மது வாங்குபவர்களும் விற்பனையாளர்களுக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறும் ஏற்பட்டு வந்தது.

இதனிடையே மதுவிலக்கு துறைக்கு முத்துசாமி அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும் மதுபான விலையைவிட கூடுதலாக பணம் வசூலிப்பதை டாஸ்மாக் மதுபானக்கடையில் பணிபுரியும் ஊழியர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை.

இந்த நிலையில், மதுபானக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில், "மதுக்கடைகளில் மதுபானங்களை நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக 10 ரூபாய் அல்லது அதற்கும் மேல் வசூலித்து விற்பனை செய்தால் கடை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக பணி நீக்கம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்