Rowdy Thiruvengadam Encounter: ரவுடி திருவேங்கடத்தை சுட்டுக்கொன்றது ஏன்? காவல்துறை விளக்கம்! இதோ முழு விவரம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rowdy Thiruvengadam Encounter: ரவுடி திருவேங்கடத்தை சுட்டுக்கொன்றது ஏன்? காவல்துறை விளக்கம்! இதோ முழு விவரம்!

Rowdy Thiruvengadam Encounter: ரவுடி திருவேங்கடத்தை சுட்டுக்கொன்றது ஏன்? காவல்துறை விளக்கம்! இதோ முழு விவரம்!

Kathiravan V HT Tamil
Jul 15, 2024 02:19 PM IST

திருவேங்கடம் தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார். உடனடியாக காவல் ஆய்வாளர் எதிரி திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த எதிரி உடனடியாக மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என போலீஸ் விளக்கம்

ரவுடி திருவேங்கடத்தை சுட்டுக்கொன்றது ஏன்? காவல்துறை விளக்கம்! இதோ முழு விவரம்!
ரவுடி திருவேங்கடத்தை சுட்டுக்கொன்றது ஏன்? காவல்துறை விளக்கம்! இதோ முழு விவரம்!

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், கடந்த 05.07.2024 அன்று, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது) கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், திருவேங்கடம், 2/33, த/பெ.கண்ணன். குன்றத்தூர், சென்னை உட்பட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். இவர் மேற்கண்ட கொலை வழக்கு தவிர இரண்டு கொலை வழக்குகள் மற்றும் வழிப்பறி. கொடுங்காய வழக்கு ஆகிய ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று 14.07.2024 தேதி அதிகாலை. போலீஸ் காவலில் இருந்த எதிரி திருவேங்கடத்தை மேற்கண்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற எதிரி தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுரப்புடன் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். அவ்வாறு அழைத்து செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தியபோது, பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு எதிரி தப்பி ஓடிவிட்டார். உடனடியாக பாதுகாவலாக சென்ற காவலர்கள் அவரை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை. புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த எதிரி திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தபோது, எதிரி தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார். உடனடியாக காவல் ஆய்வாளர் எதிரி திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த எதிரி உடனடியாக மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக M3 புழல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நீதிமன்ற நடுவர் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது என காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது. 

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெளியில் நின்று கொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, உணவு டெலிவரி ஊழியர்கள் போர்வையில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றது.

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் பேசுபொருள் ஆனது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

குற்றவாளிகள் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலா, ராமு, சந்தோஷ், திருவேங்கிடம், அருள், மணிவண்ணன், திருமலை, செல்வராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து இருந்தனர்.

மேலும் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோ மாற்றப்பட்டு புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அருண் ஐபிஎஸ், ரவுடிசத்தை கடுப்படுத்துவதே முதல் வேலை. ரவுடிகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில்தான் எங்கள் முன்னுரிமை அளிப்பேன் என கூறினார்.

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை

போதை பொருட்கள் பரவல் அதிகரித்துவிட்டதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ”தினமும் ஒரு திட்டம் கொடுப்பதால் பிரயோஜனம் கிடையாது. காவல் அதிகாரிகள் தங்கள் பணியை தொடர்ந்து செய்தாலே குற்றங்கள் குறையும்” என கூறி இருந்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.