தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா பாதிப்பு இருக்கா? - அமைச்சர் மா.சு சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா பாதிப்பு இருக்கா? - அமைச்சர் மா.சு சொல்வது என்ன?

Divya Sekar HT Tamil
Apr 10, 2023 01:52 PM IST

தமிழ்நாட்டில் உள்ள 11 ஆயிரம் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டமைப்புகள் குறித்த ஒத்திகை இன்றும் நாளையும் நடைபெறுகிறது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ட்ரெண்டிங் செய்திகள்

சராசரியாக நாடு முழுவதும் 6 ஆயிரம் பேருக்கு தினமும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நாள் தோறும் சுமார் 2 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடும் முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. மருத்துவ பரிசோதனைகள், மருத்துவமனையில் தயார் நிலைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை ஒத்திகை பார்க்கப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா பரவல் குறித்து பேசிய அவர்,”தமிழ்நாட்டில் உள்ள 11 ஆயிரம் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டமைப்புகள் குறித்த ஒத்திகை இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

அரசு சார்பில் 78 இடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையங்கள் தயார் நிலையில் உள்ளன. சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மருந்து இருப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகையின் பாதிப்பு வீரியமாக இல்லை. தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தேவை என்ற நிலை தற்போது இல்லை. தமிழகத்தில் கிளஸ்டர் பாதிப்பு இல்லை. தனித்தனியே பாதிப்பு ஏற்படுகிறது. 

தமிழ்நாட்டில் 64,281 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 24,500 ஆக்சிஜன் வெண்டிலேட்டர்கள் உள்ளன. 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் உள்ளன”எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்