தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  "அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை"

"அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை"

Manigandan K T HT Tamil
Feb 27, 2023 01:01 PM IST

Minister Ma. Subramanian: “ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான அரங்கம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.”

அறுவை சிகிச்சையால் பலனடைந்தவரை சந்தித்து வாழ்த்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அறுவை சிகிச்சையால் பலனடைந்தவரை சந்தித்து வாழ்த்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன் (@Subramanian_ma)

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-

தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி, மதுரை, கோவை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு உரிய மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, அதற்கு தேவையான அதிநவீன உபகரணங்களை பொருத்தி, மருத்துவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க முடிவெடுக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான அரங்கம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருக்கிறது.

அப்படி, இந்த அறுவை சிகிச்சையை துல்லியமாக செய்வதற்கு உரிய அதிநவீன உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, அறுவை சிகிச்சை அரங்கம் அதிநவீனப்படுத்தப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் முதல்முறையாக தோழர் ஒருவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது பெயர் மணி. அவருக்கு 52 வயது ஆகிறது. அவருக்கு இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையை பொருத்தவரை இந்தத் துறையை உருவாக்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இத்தனை ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள இந்தத் துறையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது மற்றும் பாராட்டுக்குரியது.

அந்த வகையில் மருத்துவர் ரேலாவுடன், ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்களான மருத்துவர் பிரேம் குமார், நாகநாத் பாபு, முருகன், வெள்ளையங்கிரி போன்ற மருத்துவர்கள், இவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டு கொண்டிருக்கும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரின் உதவியுடன் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

தோழர் மணி மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். அறுவை சிகிச்சை முடிந்த 17 நாட்கள் ஆன நிலையில் அவர் இன்று நடமாடுகிறார். திடகாத்திரமான மன நிலையும், உடல் உறுதியையும் பெற்று இருக்கிறார். இன்றோ அல்லது நாளையோ அவரை டிஸ்சார்ஜ் செய்ய இருக்கிறோம். தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் நன்றியை தோழர் மணி தெரிவித்தார் என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்