கவரைப்பேட்டை ரயில் விபத்து.. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தர்பங்காவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது!
Kavaraipettai Train Accident : கவரைப்பேட்டை அருகே விபத்தில் சிக்கிய பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுக்கு மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு தர்பங்கா புறப்பட்டது. பயணிகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் அருகே கவரைப் பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று ரயில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. தீப்பற்றி 3 பெட்டிகள் எரிந்த நிலையில் 2 பெட்டிகள் மேலே ஏறி நிற்கிறது. லூப்பில் நின்ற சரக்கு ரயில் மீது சென்னையில் இருந்து பிகார் மாநிலம் தர்ப்பங்கா செல்லும் விரைவு ரயில் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.
மைசூர் - தர்பங்கா விரைவு ரயில் விபத்து தொடர்பாக அவசர உதவி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 044 25354151, 044 24354995 ஆகிய எண்ணை தொடர்பு கொண்டு மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து தொலைபேசி எண்கள் மூலம் தகவல் பெறலாம். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் 19 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
உயர்மட்ட குழு அமைத்து விசாரணை
கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் பேட்டியளித்தார். அதில் ரயில் விபத்து குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும், விபத்தால் பாதிக்கப்பட்ட பாக்மதி ரயில் பயணிகள், சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக அவரவர் இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் விபத்து ஏற்பட்ட தடத்தில் சுமார் 15 மணிநேரத்தில் ரயில் போக்குவரத்து சரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.