டானுக்கெல்லாம் டான்.. நிழல் உலக தாதா.. மும்பை தமிழர்களின் பாதுகாப்பு கேடயம் வரதராஜ முதலியாரின் கதை
Varadarajan Mudaliar: டானுக்கெல்லாம் டான்.. நிழல் உலக தாதா.. மும்பை தமிழர்களின் பாதுகாப்பு கேடயம் வரதராஜ முதலியாரின் கதை குறித்துப் பார்ப்போம்.
Varadarajan Mudaliar: மும்பையில் தமிழர்கள் அடித்து வெளியேற்றப்பட்ட போது, மும்பையில் தமிழர்கள் துன்புத்திற்கு ஆளானபோது அவர்களின் பாதுகாப்பாக இருந்த, அண்டர்வேர்ல்டு டான் வரதராஜ முதலியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
யார் இந்த வரதராஜ முதலியார்? வரதராஜன் முனிசாமி முதலியார் 1926ஆம் ஆண்டு, அக்டோபர் 9ஆம் தேதி தூத்துக்குடியில் பிறந்தவர். ஆனால் இவரது தந்தையாரின் பூர்வீகம் தற்போதைய வேலூர் மாவட்டத்தின் சத்துவாச்சாரி ஆகும்.
பிரிட்டிஷ் கப்பல் கழகத்தில் அவரது தந்தை பணி செய்ததால் தூத்துக்குடிக்குப் புலம் பெயர்ந்தது வரதராஜனின் குடும்பம். தனது 19 வயதில் மும்பை சென்ற வரதராஜ முதலியார், விக்டோரியா ஸ்டேஷன் எனப்படும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் நபராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். பின் கப்பல்துறை சரக்குகளை கொள்ளையடிப்பதில் இருந்து தனது குற்றவாழ்க்கையைத் தொடங்கினார்.
மும்பையின் நிழல் உலக தாதாவாக மாறிய வரதராஜ முதலியார்:
சட்டவிரோதமாக மதுபானம் காய்ச்சுவது, மிரட்டிப் பணம் பறித்தல், கடத்தல், கூலிக்கு கொலை, சூதாட்டம், கட்டப்பஞ்சாயத்து ஆகிய குற்றச்சம்பவங்களை செய்து மும்பையின் நிழல் உலக தாதாவாக ஆனார்.
அப்போது கரீம்லாலா, ஹாஜிமஸ்தான், வரதராஜன் ஆகியோர் மும்பையை மூன்று பகுதிகளாகப் பிரித்து நிழல் உலக தாதாக்களாக இருந்து தங்கள் ஆளுகையைச் செலுத்தினர். குறிப்பாக, மாதுங்கா, தாராவி ஆகிய மும்பை நகரின் பகுதிகளில் வரதராஜனின் கை ஓங்கி இருந்தது. மேலும் தாராவி பகுதியில் தங்கியிருந்தார், வரதராஜ முதலியார். அப்பகுதியில் வசிக்கும் தமிழருக்கு ஏதாவது பிரச்னை என்றால் உடனடியாக தட்டிக்கேட்கும் நபராக வரதராஜ முதலியார் இருந்தார்.
சிவசேனா கட்சியின் தொண்டர்களாலோ மராத்தியர்களாலோ தமிழர்கள் தாக்கப்பட்டால் அந்த விஷயம் வரதராஜ முதலியார் காதுக்குச் சென்றால், தாக்கியவர்களை உண்டு இல்லையென்று ஒரு வழி செய்துவிடுவார், வரதராஜன் முதலியார். இதனால், தாராவி மக்களால் அன்புடன் ’வர்தா பாய்’ என அழைக்கப்பட்டார்.
ஆனால், வரதராஜ முதலியார் தான் தப்புவதற்காக மும்பையில் தாராவியை புகலிடமாகப் பயன்படுத்திக் கொண்டார் என்ற ஒரு குற்றச்சாட்டும் அவர்மேல் இருந்தது.
வர்தா பாயின் இறை நம்பிக்கை: தான் மும்பையில் டான் ஆக இருந்த காலகட்டத்தில் மும்பை மாதுங்கா பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வந்தார், வரதராஜன் முதலியார். அதேபோல், அவர் பிஸ்மில்லா ஷா பாபாவின் தர்காவில் ஏழைகளுக்குத் தொடர்ந்து உணவு அளித்து வந்தார். அவர்களுக்கு அன்புசெய்ய மதம் ஒரு பொருட்டாக இல்லை.
வர்தா பாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மஸ்தான்:
1980-களின் பிற்பகுதியில் பஞ்சாலைகள் மூடப்பட்ட பிறகு வரதராஜ முதலியாரின் ஆதிக்கம் மும்பையில் குறையத்தொடங்கியது. அப்போதைய போலீஸ் அலுவலர் ஒய்.சி.பவார் வரதராஜனின் குழுவினர் பெரும்பாலானோரை கைது செய்தார். அவரைப் பிடிக்க தீவிரமாக செயல்பட்டார். ஆனால், அக்காலகட்டத்தில் மும்பையில் இருந்து சென்னைக்குத் தப்பி வந்தார், வரதராஜ முதலியார். பின்னர், 1988ஆம் ஆண்டு தனது 62ஆவது வயதில் ஜனவரி 2ஆம் தேதி, சென்னையில் மாரடைப்பால் வரதராஜ முதலியாரின் உயிர் பிரிந்தது.
இருப்பினும், வரதராஜ முதலியாரின் கடைசி ஆசையை நிறைவேற்ற மற்றொரு நிழலக தாதா ஹாஜி மஸ்தான், அவரது உடலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை கொண்டுவந்தார். அங்கு அவர் அதிகம் நேசித்த தாராவி மற்றும் மாதுங்கா மக்கள் இறுதி மரியாதை செய்தபின் அவருக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ’நாயகன்’ என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் கதையை அடிப்படையாக வைத்து 1983-ல் இந்தியில் அர்த்த சத்யா என்னும் படமும், 1984-ல் தோகர் பட்டின் அம்ரிஷ் பூரி என்ற படமும், மேலும் இந்தியில் தயவன் என்னும் படமும், மலையாளத்தில் அபிமன்யு என்னும் படமும் வெளியாகின.
வர்தா பாய்க்கு ஜெயராம் முதலியார், மோகன் முதலியார், சாருமஹாலட்சுமி என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர். அதில் சாருமஹாலட்சுமி 2010ஆம் ஆண்டு, சென்னை பட்டினப்பாக்கத்தில் இருந்த அவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவர் ஹேமச்சந்தருடன் சேர்ந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
டாபிக்ஸ்