Kallakurichi: ’கள்ளச்சாராய படுகொலைகள்! அதிகாரிகள் மட்டும் பலி ஆடுகளா?’ முதல்வருக்கு சீமான் சரமாரி கேள்வி!
Kallakurichi Liquor Deaths: காவல்துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுபாட்டில் வைத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெல்வதில் காட்டும் அக்கறையையும், அவசரத்தையும் சிறிதளவாவது கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில் காட்ட வேண்டும் என சீமான் கருத்து

கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
மரண ஓலங்கள் நெஞ்சைப் பிளக்கின்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் ‘கருணா’புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஐயும் தாண்டி தொடர்ந்து அதிகரித்து வருவது ஆற்ற முடியாத மனத் துயரத்தையும், கவலையையும் அளிக்கிறது. தந்தையை இழந்து தவிக்கும் பிள்ளைகள், பிள்ளையை இழந்து தவிக்கும் பெற்றோர்கள், கணவரை இழந்து தவிக்கும் மனைவிகள் என வாசலில் இறந்த உடல்களை வைத்து அடுத்தடுத்த வீடுகளில் கேட்கும் மரண ஓலங்கள் நெஞ்சைப் பிளக்கின்றது. குடும்பப் பாரத்தைச் சுமக்க நேர்ந்துள்ள பெண்களின் அழுகுரல்கள் இதயத்தை நொறுங்கச் செய்கின்றன. கள்ளச்சாராயத்தைத் தடுக்கத்தவறி திமுக அரசு வட மாவட்டங்களைச் சுடுகாடாக மாற்றியுள்ளது.
மரணங்களை மூடி மறைக்க முயன்றது வெட்கக்கேடானது
‘கருணா’புரத்தில் கள்ளச்சாராயத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கும் அளவிற்கு மிகமோசமான சூழல் நிலவும் நிலையில், உயிரிழப்புகளுக்குக் கள்ளச்சாராயம் காரணம் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தது எப்படி? திமுக அரசு சிறிதும் மனச்சான்று இன்றி, வெவ்வேறு உடல் உபாதைகளாலேயே உயிரிழப்புகள் நிகழ்ந்தது என்றுகூறி, கள்ளச்சாராய மரணங்களை மூடி மறைக்க முயன்றது வெட்கக்கேடானது. கள்ளச்சாராயம் அருந்தி இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ள கொடுமைகளும் அரங்கேறியுள்ள நிலையில் அதிகாரிகளுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ கள்ளச்சாராயம் விற்பனை குறித்த குறைந்தபட்ச அறிதல் கூட இல்லை என்பது திமுக ஆட்சியில் அரசு இயந்திரம் எந்த அளவிற்கு மோசமாக இயங்குகிறது என்பதைக் காட்டுகிறது.