ஆப்பரேஷன் கள்ளச் சாராயம் 2.0 நடத்தப்படுமா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
தமிழகத்தில் கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை: கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களில் இருந்து மக்களைக் காக்க காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
ஆப்பரேஷன் கஞ்சா 2.0 நடத்தப்படுவது போல், ஆப்பரேஷன் கள்ளச் சாராயம் 2.0 நடத்தப்படுமா? என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஓராண்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, ஆளும் தி.மு.க-வைச் சேர்ந்தவர்களின் துணையோடு நடப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. குறிப்பாக, ஜெயலலிதாவின் அரசால் முற்றிலும் ஒழிக்கப்பட்ட கள்ளச் சாராயம் தற்போதைய இந்த அரசில் ஆறாய் ஓடுகிறது. போலி மதுபானங்கள், வெளி மாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட மதுபானங்கள், சந்துக் கடைகள் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் தாராளமாக விற்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதாவின் அரசில் சுதந்திரமாக செயல்பட்ட தமிழக காவல் துறையின் கைகள், ஆளும் தி.மு.க-வினரால் கட்டப்பட்டுள்ளதால், இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.