SGT Exam : இடைநிலை ஆசிரியர் தேர்வு அடுத்த மாதம் 21ஆம் தேதி நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
SGT Exam : இடைநிலை ஆசிரியர் தேர்வு (SGT) அடுத்த மாதம் 21ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. இந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர் தேர்வு (SGT) அடுத்த மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வுவாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில், “ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 01/2024 ன் படி 23.06.2024 அன்று நடைபெறவிருந்த இடைநிலை ஆசிரியர் (SGT) தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது. மேற்கண்ட தேர்வானது வருகின்ற 21.07.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.” என தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம்
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசின் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றுவதற்கு 1,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்த பணிக்கு போட்டித் தேர்வு எழுத விரும்புபவர்கள், பிப்ரவரி 14ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், இவர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அந்த செய்தி குறிப்பில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித் தேர்வு தாள் ஒன்று (இடைநிலை ஆசிரியர் பணி) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது தவறான தகவல்கள் தேர்வாளர்களால் அளிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.
தகவல்கள முழுமையாக படித்து விண்ணப்பங்களை பூர்த்திசெய்ய வேண்டும்
போட்டி எழுத்துத் தேர்விற்கான விண்ணப்பத்தில் அளிக்கப்படும் அனைத்து தகவல்களுக்கும் தேர்வர்களே முழு பொறுப்பாவார்கள் எனவும் , கம்ப்யூட்டர் சென்டர்கள் மூலம் ஏற்படும் தவறுகளுக்கும் அவர்களே பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள முழுமையாக படித்து விண்ணப்பங்களை பூர்த்திசெய்ய வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் பணியில் 1768 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்வர்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான போட்டி எழுத்து தேர்வு (OMR BASED) கொள்குறி வகை முறையில் ஜூன் மாதம் 23 ந் தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்
தமிழ்,உருது, தெலுங்கு,கன்னடா, மலையாளம் ஆகிய மொழி பாடங்களுக்கும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு இடங்கள் காலியாக உள்ளன என்பதையும், எந்த இட ஒதுக்கீட்டின் கீழ் அந்த இடங்கள் நிரப்பப்படும் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளன.
இடைநிலை ஆசிரியர் பணிக்கு 2024 ஜூலை மாதம் 53 வயது உள்ளவர்கள் பொது பிரிவிற்கும், இட ஒதுக்கீட்டு பிரிவில் உள்ளவர்கள் 2024 ஜூலை மாதம் 58 வயது முடிய உள்ளவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதி தேர்வு தாள் ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைவரும் தமிழ் மொழி தேர்வில் தகுதி பெற வேண்டும்.
தேர்வு கட்டணம்
தமிழ் தகுதி தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே அவர்களின் அடுத்ததாள் திருத்தப்படும். தேர்வு கட்டணமாக பொது மற்றும் பிற பிரிவினர் 600 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்சி எஸ் ஏ எஸ் டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்வு கட்டணமாக 300 ரூபாய் செலுத்தினால் போதுமானது தேர்வு கட்டணத்தை இணையதளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
போட்டி எழுத்துத் தேர்வில் தகுதி ஒன்றில் தமிழ் மொழி தாள் தேர்வில் 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். அதில் தேர்வர்கள் 40 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். பகுதி இரண்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா ,உருது, ஆங்கிலம் ,கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் ஐந்து பாடங்களில் இருந்து 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும் வகையில் 150 கேள்விகள் கேட்கப்படும்.
எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடக்கூடாது
மொழி பாடங்களில் தமிழ் அல்லது சிறுபான்மை மொழியில் ஏதாவது ஒன்றினை அவர்கள் பகுதி இரண்டு தேர்வு செய்து கொள்ளலாம். வினாத்தாளில் மொழி பாடத்திற்கான தேர்வுகள் அந்தந்த மொழிகளிலும், ஆங்கிலம் பாடத்திற்கான வினாக்கள் ஆங்கிலத்திலும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடத்திற்கான வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் இடம்பெறும்.
போட்டி எழுத்துத் தேர்வில் பெரும் மதிப்பெண்ணுடன் ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆண்டுகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண்களும் சேர்த்து தர வரிசை பட்டியல் வெளியிடப்படும்.அதன் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தொடக்க கல்வித்துறை மற்றும் பிற துறைகளின் மூலம் நியமனங்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தேர்வின் போது எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடக்கூடாது எனவும் அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்