HT Tech SPL: ஆங்கிலம் பேச பயிற்சி எடுத்துக்கொள்ள துணை புரியும் செயலி
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Tech Spl: ஆங்கிலம் பேச பயிற்சி எடுத்துக்கொள்ள துணை புரியும் செயலி

HT Tech SPL: ஆங்கிலம் பேச பயிற்சி எடுத்துக்கொள்ள துணை புரியும் செயலி

Manigandan K T HT Tamil
Published Nov 09, 2023 06:20 AM IST

பலரும் மொழிக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்று கூறுவார்கள். அது உண்மையும் கூட என்றாலும் இன்றைய உலகில் தாய்மொழியுடன் ஆங்கில மொழி அறிந்திருப்பது மிக அவசியமாகிறது.

ஆங்கிலத்தில் உரையாட உதவும் செயலி
ஆங்கிலத்தில் உரையாட உதவும் செயலி

கிராமப்பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மேல்படிப்புக்காக சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வரும்போது கல்வி நிறுவனங்களில் ஆங்கிலம் வாயிலாக அனைத்தும் கற்பிக்கப்படுவதை பார்க்கும்போது கொஞ்சம் பயந்துதான் விடுகின்றனர்.

இதனால், பல இளைஞர்கள் கல்வியை முழுவதுமாக தொடராமல் இடையிலேயே நின்று விடுவதும் உண்டு. இதனால், அவர்களின் வாழ்க்கை முறையே மாற்றம் கண்டு விடுகிறது.

கிடைக்கும் வேலைகளைப் பார்த்துக் கொண்டு கஷ்டப்படத் தொடங்கி விடுகின்றனர். சரி. சமாளித்து படித்து முடித்து விடுபவர்களும் ஆங்கிலத்தை முழுமையாக அறியாமல் பணிக்கு விண்ணப்பிப்பதால் அவர்களால் நேர்முகத் தேர்விலேயே ஜெயிக்க முடியாமல் போய் விடுவது மற்றொரு வேதனைக்குரிய விஷயம்.

பலரும் மொழிக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்று கூறுவார்கள். அது உண்மையும் கூட என்றாலும் இன்றைய உலகில் தாய்மொழியுடன் ஆங்கில மொழி அறிந்திருப்பது மிக அவசியமாகிறது.

ஆங்கிலத்துடன், கூடுதலாக எத்தனை மொழி தெரிந்திருந்தாலும் நீங்கள் அறிவுடைய நபராக பெருநிறுவனங்களுக்கு அறியப்படுவீர்கள் என்பதே நிதர்சனம். பல துறைகளில் அறிவு பெற்றவராக நீங்கள் இருந்தாலும், ஆங்கிலம் என்பது இன்றைய நவீன உலகில் அவசியமானது என்பது முற்றிலும் மறுக்க முடியாத உண்மை.

அதனால்தான் என்னவோ இன்று எல்கேஜி வகுப்பில் பிள்ளைகளை சேர்ப்பதற்குக் கூட பெரிய பெரிய தனியார் பள்ளிகளை பெற்றோர் நாடுகின்றனர்.

வசதி இருப்பவர்களால் அதுபோன்ற பள்ளிகளில் சேர்த்து பிள்ளைகளை படிக்க வைக்க முடியும். ஆனால், வசதி-வாய்ப்பற்ற குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளாக உருவெடுக்க நினைப்பவர்களுக்கு அரசு பள்ளிகளும், அரசுக் கல்லூரிகளும்தான் தேர்வாக இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது. அரசு பள்ளிகள், கல்லூரிகளிலும் ஆங்கிலம் சிறப்பாகவே கற்பிக்கப்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அங்கே ஆங்கிலத்தில் உரையாடினால் சக மாணவர்களே கேலி செய்வதும் இங்கே நடக்கிறது.

அதனால், உண்மையில் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பவர்கள் பேசிப் பழக சூழ்நிலையும் ஆளும் இல்லாமல் சிரமப்படுவார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்காக உதவும் ஒரு செயலியைதான் இந்த கட்டுரையில் உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.

எந்தவொரு மொழியுமே பேசிதான் பழக முடியும். ஆங்கிலமும் அப்படிதான். நீங்கள் எத்தனை இலக்கணங்களை கரைத்துக் குடித்தாலும் தப்பும் தவறுமாக கூச்சமின்றி பேசினால் ஒழிய ஆங்கிலம் மட்டுமல்ல எந்த மொழியுமே உங்கள் வசம் வராது.

அதற்கு உதவும் செயலிதான் English Speaking Practice. இதை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் (download) செய்து பயன்படுத்தலாம்.

இந்தச் செயலியில் உரையாடல் தொகுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது, நண்பர்களுடன் உரையாடுதல், குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடுதல், வெளி இடங்களில் உரையாடுதல், அலுவலகத்தில் உரையாடுதல் என பல கற்பனை சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டு பாடத் திட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்தச் செயலியில் உள்ள அம்சங்கள்
இந்தச் செயலியில் உள்ள அம்சங்கள்

முதலில் Listen என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து பிளே பட்டனை அழுத்தினால், அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் உரையாடலை நீங்கள் கேட்க முடியும்.

அதே பாடத்திட்டத்தில் அடுத்து வினாடி வினா (quiz) என்ற ஆப்ஷன் இருக்கும். Listen பகுதியில் நீங்கள் கவனித்ததன் அடிப்படையில் இங்கு கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.

சரியாக விடையளித்தால் correct என்றும் தவறான விடைக்கு incorrect என்றும் காண்பிக்கும். அடுத்ததாக, practice பிரிவில் நீங்கள் உங்களுடன் பேசுவதற்கு ஒருவரை தேர்வு செய்து கொள்ளலாம்.

நீங்கள் கேட்கும் கேள்விக்கு தொழில்நுட்பத்தின் உதவியுடன் அந்த நபரின் குரல் பதிலளிக்கும். அடுத்ததாக ரெக்கார்டு ஆப்ஷன் இருக்கும். அதில், நீங்கள் பேசுவதை பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். பின்னர், அதை கேட்டு நீங்கள் உச்சரித்தது சரியா என்று பார்த்துக் கொள்ளலாம். புக்மார்க் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

எப்படி ஆப் பயன்படுத்துவது என்பதற்கு வீடியோவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் நன்றாக பேச விரும்புபவர்களுக்கு இந்தச் செயலி உதவிகரமாக இருக்கும். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நமது தனிப்பட்ட வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வது தானே புத்திசாலித்தனம்!

இந்தச் செயலியை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.