Kallakurichi:'குடிக்காதே என்று அறிவுரை சொல்வதை விட, மிதமாக குடியுங்கள் என்று சொல்லலாம்': கள்ளக்குறிச்சியில் கமல் பேச்சு
Kallakurichi: குடிக்காதே என்று அறிவுரை சொல்வதை விட, மிதமாக குடியுங்கள் என்று சொல்லலாம் என கள்ளக்குறிச்சியில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
Kallakurichi: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டு இருந்தவரை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகரிப்பு:
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் ஜூன் 19ஆம் தேதி, ஒரு துக்க வீட்டில் விஷத்தன்மை மிக்க கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண்ணெரிச்சல், வயிற்று வலி, தலைவலி, உள்ளிட்ட பல உடல் உபாதைகள் ஏற்பட்டன. இரு தினங்களாக ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வரத்தொடங்கினர்.
நேரம் செல்ல செல்ல தொடர்ச்சியாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அடுத்தடுத்து ஒவ்வொருவராக சிகிச்சை பலனின்றி உயிரிழக்க தொடங்கினார். தற்போது வரை(ஜூன் 23) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உள்ளது.
மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவ்விவகாரத்தில் கைதான கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரின் மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் மற்றும் சின்னதுரை ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்க மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நிதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மட்டும் கடந்த மூன்று நாட்களில் 173 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும் இவ்விவாகரத்தில் சாராய விற்பனையாளர்கள் எனக் கருதப்படும் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா ஆகியோர் மீது கச்சிராப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
'குடிக்காதே என்று அறிவுரை சொல்வதை விட, மிதமாக குடியுங்கள் என்று சொல்லலாம்': கள்ளக்குறிச்சியில் கமல் பேச்சு
இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்களை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, ‘’கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் மற்றும் பாதிப்பை, அரசியல் ஆதாயமாகவோ, விமர்சனமாகவோ பார்ப்பதைவிட, நம்மை எல்லோருக்கும் ஒரு கடமை இருக்கிறது.
வள்ளுவனுடைய குரலில் ‘கள்ளுண்ணாமை’ பற்றி இருக்கிறது என்றால், அப்போது இருந்தே, இந்தப் பிரச்னை இருக்குங்கிறது அர்த்தம்.
அதில் இருந்து மீள்வதற்கு வழிகள் இருக்கின்றன.
இந்த சாராய வியாபாரத்தை, செய்யும் எந்த அரசாக இருந்தாலும், அதில் இருந்து வரும் வருவாயின் ஒரு பகுதியை, கண்டிப்பாக, மன தத்துவரீதியில், ஏன் இதை ஒரு அளவுக்குமேல் செய்யக்கூடாது எனும் விழிப்புணர்வு பதாகைகளை டாஸ்மாக் அருகிலேயே வைக்க வேண்டும்.
சாலை விபத்து நடப்பதால் போக்குவரத்தை நிறுத்தமுடியாது. வாகன வேகத்தை வெகுவாகக் குறைக்கமுடியாது.
அதற்காகத் தான், புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. அதுபோலத்தான் இதற்கும் தீர்வு காணப்படவேண்டும்.
மருந்துக்கடைகள் ஒரு தெருவில் எவ்வளவு இருக்கவேண்டுமோ, அதைவிட அதிகமாக டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன.
இவர்களுக்கு குடிக்காதே என்று அறிவுரை சொல்வதை விட, மிதமாக குடியுங்கள். உயிர் தான் முக்கியம் என்பதே எனது கருத்து. அறிவுரை செய்யும் இடங்கள் டாஸ்மாக் பக்கத்திலேயே இருக்கவேண்டும் என்பது தான், எனது வேண்டுகோள்.
உடனே, மது விலக்கு கொண்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றல்ல. முன்பைவிட மதுவிலக்கு அமல்படுத்தினால் தான் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதற்கு அமெரிக்காவே ஒரு உதாரணம்.
அதைத்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
குடிக்கச் செல்லும் நபர்களுக்கு டாஸ்மாக் பக்கத்திலேயே அதன் தீமைகளை சொல்லும் கவுன்சிலிங் மையங்கள் திறக்கப்படவேண்டும். மருந்துக்கடைகளை விட டாஸ்மாக் கடைகள் அதிகமாக இருக்கும்போது இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் சாத்தியமானதுதான்.
தமிழ்நாடு அரசினால் செய்யமுடியும் எனும் விமர்சனத்தை செய்துகொண்டு இருக்கிறார்கள்’’என்றார்.
டாபிக்ஸ்