TNPSC புதிய தலைவராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம்! சைலேந்திரபாபுவை ஏற்க மறுத்த ஆளுநர்! இடையில் நடந்தது என்ன?-prabhakar ias appointed as tnpsc chairman - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tnpsc புதிய தலைவராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம்! சைலேந்திரபாபுவை ஏற்க மறுத்த ஆளுநர்! இடையில் நடந்தது என்ன?

TNPSC புதிய தலைவராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம்! சைலேந்திரபாபுவை ஏற்க மறுத்த ஆளுநர்! இடையில் நடந்தது என்ன?

Kathiravan V HT Tamil
Aug 14, 2024 01:23 PM IST

தமிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணைய தலைவராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் இந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC தலைவராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம்!
TNPSC தலைவராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம்!

யார் இந்த பிரபாகர் ஐ.ஏ.எஸ்?

1989ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பயிற்சியை நிறைவு செய்த பிரபாகர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். காலஞ்சென்ற திமுக தலைவர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, அவரது செயலாளராக இருந்தவர் பிரபாகர். 

உள்துறை செயலாளர், தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளர், வணிக வரித்துறை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அரசு பொறுப்புகளை அவர் வகித்து உள்ளார்.  

2022 முதல் புதிய தலைவர் நியமனம் செய்யப்படவில்லை 

முன்னதாக டி.என்.பி.எஸ்.சி தலைவராக இருந்த பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், கடந்த 2020ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். தற்போது பொறுப்பு டிஎன்பிஎஸ்சி தலைவராக முனைவர். ச. முனியநாதன் கடந்த 10.06.2022 முதல் இருந்து வருகிறார். 

சைலேந்திரபாபு நியமனம்! திருப்பி அனுப்பிய ஆளுநர்!

டிஎன்பிஎஸ்சி தலைவராக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபுவை நியமிக்க தமிழக அரசு பரிந்துரைத்து கோப்புகளை அனுப்பியது. இந்த நிலையில் தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பி இருந்தார். 

சைலேந்திர பாபு நியமனம் குறித்து ஆளுநர் எழுப்பிய கேள்வி!

இப்பதவியில் உள்ளவர்கள் 62 வயதில் ஓய்வு பெற வேண்டும், ஆனால், சைலேந்திர பாபுவுக்கு 61 வயதாகிவிட்டது. எனவே, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை எனத் தெரிவித்ததுடன், டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்களை அளிக்குமாறு தமிழக அரசிடம் கேட்டு இருந்தார். மேலும் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா என்றும் தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

கேள்வி எழுப்பிய திமுக

ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நடவடிக்கை குறித்து பேசி இருந்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்து ஒரு மாதம் ஆகிவிட்டது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அதிமுகவினரையே டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமித்தார்கள் ஆனால் நாங்கள் அப்படியெல்லாம் செய்யாமல் அரசியலுக்கு அப்பார்பட்ட அனுபவம் மிக்கவரான சைலேந்திரபாபுவை நாங்கள் பரிந்துரை செய்தோம். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு போட்டியாக இன்னொரு அரசை நடத்த முயற்சி செய்கிறார் என கூறி இருந்தார். 

டி.என்.பி.எஸ்.சி எப்படி செயல்படுகின்றது?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்பது தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புகள் மற்றும் பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தும் ஒரு முதன்மையான அமைப்பாகும். தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள பதவிகளுக்கு, பொதுத் தேர்வுகளை இந்த அமைப்பு எழுத்து மற்றும் வாய்மொழி ஆகிய இரண்டு வகைகளில் நடத்துகின்றது.  அரசு துறைகளில் உள்ள பதவிகளுக்கு, திறமை வாய்ந்த மற்றும் தகுதியாகத் தேர்வு செய்யப்பட்ட நபர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.  

வேலை மற்றும் அதன் பொறுப்புகளுக்கு ஏற்ப தனித்தனி தேர்வு, செய்முறை மற்றும் தரநிலைகளை இந்த அமைப்பு கொண்டு உள்ளது. 

 டி.என்.பி.எஸ்.சி நடத்தும் முக்கிய தேர்வுகள் 

குரூப் 1: முக்கிய நிர்வாக பணிகளுக்கான தேர்வு.

குரூப் 2: துணை நிர்வாக பணிகளுக்கான தேர்வு.

குரூப் 4: ஆரம்ப நிலை பணிகளுக்கான தேர்வு.

விவசாய அலுவலர், பொருளாதார உதவியாளர் போன்ற சிறப்பு தேர்வுகள் ஆகிய தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்துகின்றது.  

 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.