தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Pmk President Anbumani Ramadoss Comments On Setting Up A Pen Memorial To Kalaigar Karunanidhi At Marina Beach

கலைஞரின் பேனா சின்னம்! மவுனம் கலைத்த அன்புமணி ராமதாஸ்

Kathiravan V HT Tamil
Feb 02, 2023 02:18 PM IST

காலநிலை மாற்றம் என இயற்கைச் சார்ந்து அதிகம் பேசும் அன்புமணியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி சமூகவலைத்தளங்களில் எழுந்தது

பேனா நினைவு சின்னம் மாதிரி படம் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பேனா நினைவு சின்னம் மாதிரி படம் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டமானது, சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை, ஆதரவு எதிர்ப்பு என்று மாறி மாறி பதிவு செய்திருந்தனர். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதுடன் பரபரப்பாகவும் பேசப்பட்டது.

தமிழக அரசியல் கட்சிகள் பலவும் தங்களது நிலைப்பாட்டை அறிவித்த நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஐநா வரை சென்று பேசும் பசுமைத் தாயகம் அமைப்பை நடத்தும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும், நீர் மேலாண்மை, காலநிலை மாற்றம் என இயற்கைச் சார்ந்து அதிகம் பேசும் அரசியல் தலைவரான அன்புமணியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என அறிய அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்த போது, பேனா நின்னவுச் சின்னம் குறித்து பேசினார். 

கலைஞர் அவர்கள் மறைந்த போது, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவினர் அறிஞர் அண்ணாவின் நினைவிடத்தின் அருகே அடக்கம் செய்ய வேண்டும் என விரும்பியதன் காரணமாகவும், கலைஞர் அவர்கள் மீது நாங்கள் அளவு கடந்து வைத்திருந்த அன்பின் காரணமாகவும், மெரினா கடற்கரையில் கட்டுமானங்கள் கூடாது என நாங்கள் நடத்தி வந்த வழக்கினை திரும்ப பெற்றுக் கொண்டோம். 

கலைஞர் மீது கொண்ட அன்பின் காரணமாக இரவோடு இரவாக நான் சொன்னதன் பேரில், எங்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் வழக்கை திரும்ப பெற்றனர். அதன் பின்னர் தான் நீதிமன்றம், மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தின் அருகே கலைஞருக்கு இடம் ஒதுக்க அனுமதி அளித்தது.

ஆனால் தற்போது, பேனா நினைவுச் சின்னத்தை கடலில் அமைப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் கடல் என்பது சுற்றுச்சூழல் சார்ந்த ஒன்று. இன்று கலைஞருக்கு நினைவுச் சின்னம் வைக்கிறோம் என்றால், மற்றவர்களும் எதிர்காலத்தில் அவரவர்களின் சின்னங்களை அங்கே வைக்க வேண்டும் என வரிசையாக வந்து நிற்பார்கள். 

அதற்கு வழிவகுக்கும் தவறான முன்னுதாரணமாக இந்த நினைவுச்சின்னம் இருந்துவிடக் கூடாது. அவ்வாறு ஒவ்வொருவராக வந்து சின்னம் அமைக்கப்பட்டால், கடல் சீரழிக்கப்பட்டு விடும். அவ்வாறு சீரழியாத வண்ணம் நினைவு சின்னத்தினை கடலில் அமைக்காமல், அருகிலேயே இருக்கும் கலைஞர் நினைவிடத்தின் வளாகத்திலேயே அமைத்திட வேண்டும் என்பதை எங்கள் கோரிக்கையாக நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

மெரினா கடற்கரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக அளவில் எந்த கடற்கரையிலும் நினைவுச் சின்னங்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் வைப்பது என்பது, சரியானதாக இருக்காது என்பது தான் எங்கள் நிலைப்பாடு என அன்புமணி தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்