கடலூரில் அன்புமணி! காஞ்சியில் திருமா! தில்லையில் ஆ.ராசா! தொகுதி மாறும் VIP வேட்பாளர்கள்?
Parliamentary Elections 2024: ஆதிதிராவிடர் சமூகம் அதிகமுள்ள சிதம்பரம் தொகுதியை ஆ.ராசா குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது
அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் எந்த தொகுதி யாருக்கு சரியாக வரும் எப்படி ஜெயிக்கலாம் என்ற வியூகத்தை வகுக்க தொடங்கிவிட்டன அரசியல் கட்சிகள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியை உள்ளடக்கிய மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை அலேக்காக அள்ளியது திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி.
உறுதியான திமுக கூட்டணி - உதிரும் அதிமுக கூட்டணி
இந்த நிலையில் அடுத்தாண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சற்று காட்சிகள் மாறத் தொடங்கி உள்ளது. திமுக கூட்டணி உறுதியாக உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, தேமுதிக கட்சிகள் தனியாக சென்றுவிட்டன.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடனான கூட்டணி தொடரும் என்ற அறிவிப்பின் மூலம் பிளவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அமித்ஷா.
உதயசூரியன் சின்னத்தில் வென்று பெரம்பலூர் எம்.பியான பாரிவேந்தரின் ஐஜேகே, வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோற்ற ஏ.சி.சண்முகத்தின் புதியநீதிக்கட்சி, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் தற்போது உள்ளன.
இந்த நிலையில் கடந்த நாடாளுன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற நட்சத்திர வேட்பாளர்கள் வரும் தேர்தலில் தொகுதி மாற திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
கடலூரில் அன்புமணி?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு செல்வாக்கு மிக்க தொகுதியாக கருதப்பட்ட தருமபுரி தொகுதியில் அதிமுக ஆதரவுடன் களம்கண்ட அன்புமணி ராமதாஸை திமுக வேட்பாளர் செந்தில் குமார் 70,753 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
தோல்விக்கு பின்னர் அதிமுக ஆதரவுடன் ராஜ்ஜியசபா எம்.பியானார் அன்புமணி. பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி தற்போதே கடலூர் மக்களவை தொகுதியை குறி வைத்து தேர்தல் வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தகிக்கும் என்.எல்.சி போராட்டம்
இதன் ஒரு பகுதியாகத்தான் நெய்வேலி என்.எல்.சி நில எடுப்பு பிரச்னையை முன்னிலைப்படுத்தி பாமக தொடர் போராட்டங்களை நடத்தி வருவதுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடலூர் மாவட்டம் முழுவதும் ’பந்த்’தும் அறிவித்திருந்தது.
கடந்த முறை கடலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் வென்ற டி.ஆர்.வி.ரமேஷ் கொலை புகார் ஒன்றில் சிக்கியதால் அவர் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ளார்.
வன்னியர் சமூகத்தை சேர்ந்தவரான கோவிந்தராசு மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி பாமக போராட்டத்தில் குதித்தது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மக்களவை தொகுதியை உள்ளடக்கிய திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ரூட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய தொகுதிகள் ஏற்கெனவே திமுக வசமுள்ள நிலையில் திமுக கூட்டணி அமைந்தால் அன்புமணியின் வெற்றி உறுதி என்கின்றனர் கடலூர் மாவட்ட பாமகவினர்.
சிதம்பரத்தில் ஆ.ராசா
1996, 1999, 2004 ஆகிய தேர்தல்களில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் இருந்து எம்.பியானவர் திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா.
2009 தொகுதி மறுசீரமைப்புக்கு பின் தனித் தொகுதியாக இருந்த பெரம்பலூர் பொதுத்தொகுதியானதால் கொங்கு மண்டலத்தில் உள்ள நீலகரி தனித் தொகுதிக்கு இடம் மாறினார்.
2009 முதல் கடந்த 2019 வரை நடந்த 3 தேர்தல்களில் நீலகிரியில் போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்ற ஆ.ராசா இம்முறை தொகுதி மாற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.
காய் நகர்த்தும் எல்.முருகன்
அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் அதிகமுள்ள நீலகிரி மக்களவை தொகுதியில் தற்போது மத்திய இணையமைச்சராக உள்ள எல்.முருகன் குறிவைத்து வேலை பார்த்து வருகிறார். அதிமுகவும் அங்கு வலுவாக உள்ளது.
அவர் சார்ந்த அருந்ததியர் மக்களின் ஆதரவை பெறும் வகையில் அருந்ததியர் சங்கங்களை ஒன்றிணைத்து தேர்தல் வேலையை எல்.முருகன் தொடங்கிவிட்டதாக முனுமுனுப்பு குரல்கள் கேட்கத் தொடங்கி உள்ளது.
எனவே ஆதிதிராவிடர் சமூகம் அதிகமுள்ள சிதம்பரம் தொகுதியை ஆ.ராசா குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
காஞ்சியில் திருமா!
தற்போது சிதம்பரம் மக்களவை தொகுதி எம்.பியாக இருக்கும் திருமாவளவன், கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ’பானை’ சின்னத்தில் களம் கண்டார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை வெறும் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நூலிழையில் வெற்றி பெற்றிருந்தார்.
திமுக கூட்டணி வெற்றி செய்திகள் நாடெங்கும் ஒலித்த சூழலில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் உறுதி செய்யப்பட்டது திருமாவின் வெற்றி.
அத்தேர்தலின் போதே பொன்பரப்பியில் பாமக-விசிக இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பாக பேசப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திருமாவளவனை தொகுதி மாற திமுக வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. திமுக-விசிக கூட்டணிக்கு சாதகமான தனித் தொகுதிகளான திருவள்ளூர், காஞ்சிபுரம் தொகுதிகளை திருமாவுக்கான ஆப்ஷன்களாக கொடுத்துள்ளது திமுக. இதன் மூலம் திருமாவளவனை எளிதாக ஜெயிக்க வைக்க முடியும் என நம்புகிறது அறிவாயம்.
சென்னைக்கு மிக அருகில்…!
இரண்டு தொகுதிகளும் சென்னைக்கு அருகே உள்ளதால் எளிதில் சென்று வரவும் வசதியாக இருக்கும் என்பதும் ஒருவேளை கடலூரில் அன்புமணி களமிறங்கும் நிலையில், அதன் பக்கத்து தொகுதியான சிதம்பரத்தில் திருமா களமிறங்குவதன் மூலம் தேவையற்ற பதற்றம் ஏற்படும் என்பதையும் கவனத்தில் கொண்டும் தீவிரமாக சிந்தித்து வருகின்றார்களாம் விசிகவினர்.
பாமக-பாஜக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறாது என ஏற்கெனவே திருமா பகிரங்கமாக அறிவித்துள்ளது நினைவுக்கூறத்தக்கது.
கை கொடுக்கும் காஞ்சி
காஞ்சிபுரம் தனி நாடாளுன்றத் தொகுதியை பொறுத்தவரை செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது. இதில் உள்ள செய்யூர், திருப்போரூர் தொகுதிகள் ஏற்கெனவே விசிக வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
என்னத்தான் சிதம்பரம் திருமாவின் சொந்த தொகுதியாக இருந்தாலும் சென்னை, டெல்லியை சுற்றி சுழலும் அரசியல் பணிகளால் தொகுதிக்கு அடிக்கடி செல்ல முடியாத வருத்தமும் திருமாவுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
சிதம்பரத்தில் வீடு பார்க்கும் திருமா?
இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளதால் சிதம்பரத்திலேயே நிரந்தமாக தங்க முடிவு செய்துள்ள திருமாவளவன் வீடு பார்க்கும் பார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளாராம்.
கடந்த முறை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் விழுப்புரம் தனித் தொகுதியில் விசிகவின் ரவிக்குமார் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை கூடுதலாக ஒரு பொதுத் தொகுதியையும் கேட்டுப்பெற காய்களை நகர்த்தி வருகிறதாம் விசிக.