தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Seeman : பாஜக அரசின் சனநாயக விரோத செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக.. அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த சீமான்!

Seeman : பாஜக அரசின் சனநாயக விரோத செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக.. அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த சீமான்!

Divya Sekar HT Tamil
Jun 27, 2024 03:51 PM IST

Seeman : அதிமுக உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துள்ளது திமுக அரசு, இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பாஜக அரசின் சனநாயக விரோத செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக.. அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த சீமான்!
பாஜக அரசின் சனநாயக விரோத செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக.. அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த சீமான்!

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவில், ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

சீமான் ஆதரவு

மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும். 

இந்திய ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இன்றும் அமளி

முன்னதாக இன்று காலை சட்டப்பேரவை தொடங்கியதுமே கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜூன் 29ஆம் தேதி இக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சார மரண சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக உள்ளநிலையில் சிபிஐ விசாரணை கோரி பேரவையில் அதிமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 4 ஆவது நாளாக சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்கள் கள்ளச்சாராய பிரச்சனை குறித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிமுக உறுப்பினர்களை அவை காவலர்கள் வெளியேற்றினர்.

அதிமுகவினர் சஸ்பெண்ட்

இந்நிலையில் அவை முன்னவர் துரை முருகன் அதிமுகவினரை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையடுத்து குரல் வக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேறியது. இதனால் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் ஜூன் 18ஆம் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், பாண்டிச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 10 லட்சமும், சிகிச்சை பெறும் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரமும் நிவாரணமாக அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது.

கைது

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து கண்ணுக்குட்டி என்கிற கோவிந்த ராஜ், தாமோதரன், கோவிந்தராஜ் மனைவி விஜயாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் விற்பனைக்கு மெத்தனால் விற்பனை செய்த சின்னதுரை என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய புகாரில் குற்றப்பின்னணி உடையவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி கைது செய்து வருகின்றனர்.

விசாரணை அதிகாரி நியமனம்

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.