தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Millets Benefits Benefits Of The Millet Foods Explained Here Get Full Details

Millets Benefits:‘சிறுதானியங்களின் சிறப்பு‘

Priyadarshini R HT Tamil
Feb 19, 2023 12:02 PM IST

சிறுதானியங்கள் 1970 களில் இந்தியாவில் 25% உணவுத் தேவையை பூர்த்திசெய்து வந்துள்ள நிலையில், பசுமைப் புரட்சியின்போது, சிறு தானியங்களே சிறப்பு வாய்ந்த உணவாக இருந்தபோதும் அரிசியும், கோதுமையும் மக்கள் விரும்பி உண்ணத்துவங்கியவுடன், தற்போது உணவு தேவையில் சிறு தானியங்களின் பங்கு 6%க்கும் கீழ் குறைந்துள்ளது.

சிறுதானியங்கள் - கோப்புப்படம்.
சிறுதானியங்கள் - கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

எனவே, ரத்தசோகையை கட்டுப்படுத்த, 20 சதவீதம் அரசி, கோதுமையை நீக்கி, கம்பு, கேழ்வரகை பொதுவிநியோகத் திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் சரிசெய்ய முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தசோகை, சர்க்கரை நோய் டைப்-2, இதயப் பிரச்சனைகள், கொழுப்பை கட்டுப்படுத்துதல், கால்சியம் பற்றாக்குறையை கட்டுப்படுத்துதல், புற்றுநோயை கட்டுப்படுத்துதல் போன்றவற்றை எளிதில் நிறைவேற்ற முடியும். சிறுதானியங்கள் மூலம் 15-20% நார்ச்சத்து நமக்கு கிடைக்கிறது. 

மேலும் சிறுதானியங்களுக்கு குறைந்த அளவு நீர், பூச்சிக்கொல்லி, உரம், (இதனால் புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்த முடியும்) குறைந்த ஆட்களின் வேலை (Reduced Manpower) போதுமானது. வறட்சி, வெப்பம் போன்றவற்றை தாங்கும் தன்மையும் சிறுதானியங்களுக்கு இருப்பதுடன், அவை எளிதில் நோய்களுக்கு ஆளாகும் தன்மை இல்லாமல் இருப்பதும் கூடுதல் சிறப்பு.

அரிசி, கோதுமை உற்பத்தியை தொழில்நுட்பம் மூலம் பெருக்க உலக அமைப்புகள் உதவி செய்ய முன்வந்தாலும், சிறுதானியங்களின் உற்பத்தியை பெருக்க இந்திய அரசு மட்டுமே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

1993-94ம் ஆண்டில், ஏழை மக்கள் 25 சதவீதம் பேர் மாதத்திற்கு ஒருவர் 1.59 கிலோ சிறுதானியங்கள் உட்கொண்டார். அந்த அளவு 2011-12ல், 0.27 கிலோவாக குறைந்துவிட்டது. மேலும் சமீபத்திய ஆய்வில், 10 சதவீதத்திற்கும் கீழ் கிராம, நகர்புறங்களைச் சார்ந்த குடும்பத்தினரே சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டுள்ளனர் எனும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் 50% உணவுத் தேவையை அரசி, கோதுமை, சோளம் மூலமே மக்கள் பெறுகின்றனர். நமது 80 சதவீத உணவுத் தேவைகளை நாம் 13 தானியங்களில் இருந்து மட்டுமே பெறுகிறோம். இந்தியாவில் 3ல் 1 குழந்தை சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கம்பு, கேழ்வரகு, சோளம் மட்டும் அரசின் பாதுகாப்பு கொள்முதல் விலையின் கீழ் வருகிறது. இது பிற சிறுதானியங்களுக்கும் விரிவு படுத்தப்படவேண்டும்.

சிறுதானியங்களின் உற்பத்தியை பெருக்கவும், பயிரிடும் அளவை அதிகப்படுத்தவும் அரசின் நடவடிக்கைகள் நிச்சயம் தேவை. உற்பத்தி செய்யப்படும் சிறுதானியங்களை மாற்றம் (Processing) செய்தபின் மட்டுமே உட்கொள்ள முடியும் என்பதால் அதற்கென தனியான இயந்திரங்களும், உபகரணங்களும் தேவை என்பதால் அவற்றை மானிய அடிப்படையில் வழங்க அரசு முன்வர வேண்டும். தேவையான வசதிகளுடன் சேமிப்பு கிடங்குகள் உருவாக்கப்பட வேண்டும்.

சிறுதானியங்களை உற்பத்தி செய்ய அரசு விவசாயிகளுக்காக தக்க நடவடிக்கைகள் எடுத்து ஊக்கப்படுத்த முன்வர வேண்டும். தேவையான மானியங்கள், உதவிகள் உற்பத்தி செய்வோருக்கு வழங்கப்பட வேண்டும்.

இவையனைத்தையும் செய்யாமல், 2023ஐ சிறுதானிய ஆண்டாக அறிவித்து, மற்ற ஊக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தால், சிறுதானியங்களின் பயன்கள், அதனால் கிடைக்கும் சுகாதார நன்மைகள், அதனால் கிடைக்கும் பொருளாதார முன்னேற்றம் பலனற்றே இருக்கும் என்பதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் தக்க ஊக்க நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த முன்வந்தால் மட்டுமே சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

சமூக வலைதள பகிர்வு மருத்துவர். புகழேந்தி 

IPL_Entry_Point

டாபிக்ஸ்