Lok Sabha Election 2024: அதிமுகவுக்கு ஏன் வேண்டும்? திமுக ஏன் விடாது? காங்கிரஸ் காட்டில் மழை ஏன்?
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Lok Sabha Election 2024: அதிமுகவுக்கு ஏன் வேண்டும்? திமுக ஏன் விடாது? காங்கிரஸ் காட்டில் மழை ஏன்?

Lok Sabha Election 2024: அதிமுகவுக்கு ஏன் வேண்டும்? திமுக ஏன் விடாது? காங்கிரஸ் காட்டில் மழை ஏன்?

Stalin Navaneethakrishnan HT Tamil
Feb 29, 2024 06:24 PM IST

Lok Sabha Election 2024: அதிமுகவுக்கு காங்கிரஸ் கட்சி ஏன் தேவை? திமுக ஏன் காங்கிரஸ் கட்சியை சுமக்கிறது? காங்கிரஸ் கட்சி எடுக்கப்போகும் முடிவு என்ன? அனைத்தையும் விரிவாக அலசியிருக்கிறோம்!

காங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் பிரதான கட்சிகள். காரணம் என்ன?
காங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் பிரதான கட்சிகள். காரணம் என்ன?

அவ்வளவு செல்வாக்கான கட்சியா காங்கிரஸ்?

இந்த அளவிற்கு காங்கிரஸ் கட்சி மீது எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அளவிற்கு, தமிழ்நாட்டில் அவ்வளவு பெரிய கட்சியா அது? உண்மையில் கேட்டால், அது உண்மையில்லை என்பது காங்கிரஸ்காரர்களுக்கே தெரியும். அடிப்படை கட்டமைப்பை வளர்க்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி மீது புகார் உண்டு. உண்மையில், அடிப்படையில் அவர்கள் பலமாக தான் இருந்தார்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தார்கள். அதன் பின் அடிப்படை அழிக்கப்பட்டது. அது மீட்கப்படவில்லை என்பது தான் உண்மை. பாஜக, ஜீரோவில் இருந்து கணக்கை துவங்கியது. காங்கிரஸ் கட்சியோ, இருந்ததை தக்க வைக்காமல், இன்றும் அதை மீட்க முடியாமல், கிடைப்பதை பெற்று கூட்டணி சவாரி செய்து கொண்டிருக்கிறது. தனிப்பட்ட செல்வாக்கு என்றால், காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரியை கடந்து இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் அந்த கட்சியை தூக்கிபிடிக்க வேறுசில காரணங்களும் இருக்கிறது. 

அதிமுகவுக்கு காங்கிரஸ் ஏன் தேவை?

பாஜக கூட்டணியில் இருந்த வரை, அதிமுகவை மதவிரோத சக்தியாக சித்தரித்தார்கள். உண்மையில் அதிமுகவின் கொள்கையும், பாஜகவின் கொள்கையும் வேறு வேறு. இருந்தாலும், கூட்டணி என்கிற பெயரில், பாஜகவின் நிழலாக அன்று அதிமுக விமர்சிக்கப்பட்டது. இன்று பாஜகவை உதறிவிட்டு, தனியாக வந்திருக்கிறது அதிமுக. இருந்தாலும், பாஜக உடன் ரகசிய கூட்டு, கள்ள உறவு என்றெல்லாம் எதிர்கட்சிகள் விமர்சிக்கிறார்கள். இதை உடைக்க வேண்டுமென்றால், பாஜகவிற்கு நேர்எதிர் கட்சியான, அல்லது பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தால், அது அதிமுக மீதான விமர்சனத்தை அடியோடு மாற்றும். பாஜகவை உதறுவதை விட, காங்கிரஸ் கட்சியுடன் இருப்பதை மதச்சார்பற்ற நிலைப்பாடாக சிலர் பார்க்கின்றனர். அதனால் தான், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி மீது ஒருவித ‘சாஃப்ட் கார்னர்’ இன்றும் இருக்கிறது. மற்றபடி, அது செல்வாக்கு சார்ந்த விசயம் அல்ல. அந்த வகையில் தான், காங்கிரஸ் கட்சிக்காக காத்திருக்கிறது அதிமுக. காங்கிரஸ் வராவிட்டாலும் அதிமுகவிற்கு இதில் ஒரு ப்ளஸ் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்காக காத்திருந்து, பாஜகவிற்கு எதிரான கட்சி என்பதை நிரூபித்தது அதிமுக என்கிற பெயரும், அக்கட்சிக்கு கிடைக்கலாம். அரசியலில் நஷ்டத்தை விட, எதையெல்லாம் லாபமாக்கலாம் என்பது தான் முக்கியம். அந்த வகையில், காங்கிரஸ் உடன் கூட்டணி சேர்வது மட்டுமல்ல, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதே, அல்லது நடத்துவதாக பேசப்படுவதே அதிமுகவிற்கு சாதகம் தான். 

திமுக ஏன் காங்கிரஸ் கட்சியை சுமக்கிறது?

மேலே சொன்ன காரணம் தான்.  காங்கிரஸ் கட்சியை மதச்சார்பின்மைக்கான ஒரு ப்ராண்டாக பார்க்கிறது திமுக. காங்கிரஸ் கட்சியால், அவர்களுக்கு பெரிய ஓட்டு கிடைக்காது. ஆனால், காங்கிரஸ் கட்சியை வைத்து ஓட்டு கிடைக்கும் என்பது அவர்களது கணக்கு. அதனால் தான், காங்கிரஸ் கட்சியை விட ஓட்டு செல்வாக்கான கட்சிகள் தங்கள் கூட்டணியில் இருந்தாலும், அவர்களை விட அதிக தொகுதிகளை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி வருகிறது திமுக. இந்த தேர்தலிலும் அவ்வளவு எளிதாக காங்கிரஸ் கட்சியை உதறிவிடாது திமுக. தொகுதி பங்கீடு என்பது பேரம் மட்டுமே. அந்த பேரத்தை, கடைசி வரை கட்சிகள் எடுத்துச் செல்லும். இறுதியில், ஒருவித சமரசம் ஏற்படும். இது தான், கடந்தகால வரலாறு. அதுமட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியை தக்க வைக்க வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு இருக்கிறது. அதற்கு காரணம், அதிமுக போலவே திமுகவும் சில விமர்சனங்களை சந்திக்கிறது. குறிப்பாக, ‘பாஜக உடன் ரகசிய தொடர்பு’ என்கிற விமர்சனம். அப்படியிருக்க, காங்கிரஸ் கட்சி வெளியேறினால், அது உண்மை என்கிற சந்தேகம் வரலாம். அது அவர்களின் வாக்குகளை பாதிக்கலாம். எனவே தான், காங்கிரஸ் கட்சியை அவ்வளவு எளிதாக கடந்து விடாது திமுக.

காங்கிரஸ் காட்டில் மழை!

பூத் அளவில் கூட இன்னும் கட்டமைப்பை வலுப்படுத்தாத காங்கிரஸ் கட்சிக்கு, தமிழ்நாட்டில் இரு பிரதான கட்சிகள் முக்கியத்துவம் தருகின்றன. அதனால் தான், அந்த கட்சி இன்னும் தமிழ்நாட்டில் நிலைத்து நிற்கிறது. ‘இது தங்களுக்கு போதும்’ என்று காங்கிரஸ் திருப்திப்பட்டுக் கொள்கிறது. அதனால் தான், அந்த கட்சி வளர்வதும் இல்லை, வளர முயற்சிப்பதும் இல்லை. இன்றைய சூழலில், அதிக டிமாண்ட் உள்ள கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. அவர்களுக்கு ஆப்ஷன் இருக்கிறது. அப்படியிருக்க பேரம், இன்னும் பெரிதாகத் தான் இருக்கும்.  மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் பந்தாடப்படுகிறது, துண்டாடப்படுகிறது. பெரிய வாக்காளர் சக்தி இருந்தும், திண்டாடுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் தான், எந்த செல்வாக்கும் இல்லாமல், ‘மற்றவர்கள் எடுக்கும் முடிவு, தனக்கு சாதகம்’ என்கிற முடிவில், கூட்டணி தோளில் சாயாமல் ஊர்வலம் செல்கிறது காங்கிரஸ். பார்க்கலாம், இந்த முறை யாருக்கு அறுவடை தரப்போகிறது, தனக்கு அறுவடை செய்யப் போகிறது காங்கிரஸ் கட்சி என்று!

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.