Kallakurichi Deaths: கள்ளச்சாராய மரணம்! ஆட்சியர்தான் காரணம்! வீடியோவை வெளியிட்ட ஈபிஎஸ்! பேரவையில் பரபரப்பு!
Kallakurichi Liquor Deaths: கள்ளக்குறிச்சியில் மக்கள் அதிகம் நடமாடும் அந்த பகுதியிலேயே கள்ளச்சாராயம் விற்பனை நடந்து உள்ளது எனில், உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து முதலில் விவாதிக்க கோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளி செய்தனர். பின்னர் அவர்களை காவல் துறையினர் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
‘50 பேர் உயிரிழந்து உள்ளனர்’
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி நகரத்தில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 50 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்து உள்ளது. பாண்டிச்சேரி ஜிம்பர் மருத்துவமனை, விழுப்புரம் அரசு பொது மருத்துவமனை, கள்ளக்குறிச்சி மருத்துவமனை, சேலம் அரசு பொது மருத்துவமனைகளில் 96 பேர் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வந்து உள்ளன. 146 பேர் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டதாகவும், அதில் 50 பேர் இறந்து உள்ளதாகவும், எஞ்சியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. அதில் பலர் கவலைக்கிடமாகவும், பலருக்கு கண்பார்வை தெரியவில்லை என்றும் செய்திகள் வந்து உள்ளன.
எம்.எல்.ஏவாக இருக்கவே அர்த்தம் இல்லாமல் போய்விடும்
இது குறித்து சட்டமன்றத்தில் பேச பேரவை தலைவரிடம் அனுமதிகேட்டோம் ஆனால் பேரவை தலைவர் அனுமதி மறுத்துவிட்டார். இது நாட்டையே உலுக்கும் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம். மக்கள் கொதித்து போய் இருக்கும் இந்த சம்பவம் குறித்து கூட சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு இல்லை என்றால் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
வலுக்கட்டாயமாக வெளியேற்றுகின்றனர்
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மக்கள் பிரச்னையை அரசு கவனத்திற்கு கொண்டு வருவது எங்கள் தலையாய கடமை. அந்த அடிப்படையில்தான் சட்டமன்றம் கூடிய உடன் கள்ளக்குறிச்சி மரணம் குறித்து பேச நான் எழுந்தேன். ஆனால் சபாநாயகர் அனுமதி தரவில்லை. ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்கள் கள்ளச்சாராயம் குறித்து இறந்து உள்ளனர்.
அரசு இவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. ஆனால் சட்டப்பேரவை தலைவர் வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றிவிட்டார். சட்டப்பேரவை தலைவர் நடுநிலையோடு செயல்பட்டு இருக்க வேண்டும் 50 உயிர்களை இழந்துள்ளது குறித்து பேச தொடர்ந்து கேட்டதால், எங்களை வெளியேற்றி உள்ளனர். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமாரை அலாக்காக தூக்கி கொண்டு வந்து உள்ளனர். இது ஒரு ஜனநாயக படுகொலை, நாட்டு மக்கள் உயிர் போவது குறித்து பேச சட்டமன்றத்தில் அனுமதி மறுக்கப்படுகின்றது.
திறமையற்ற முதலமைச்சர்
இது ஹிட்லர் ஆட்சி போல் சர்வாதிகார ஆட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி என்ற முறையில் எங்கள் குரல் சட்டமன்றத்தில் எதிரொளிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம்.
போதை மற்றும் கள்ளச்சாராய தடுப்பு குறித்து பலமுறை முதலமைச்சர் கூட்டம் போட்டு நடத்தியும், ஏன் கள்ளச்சாராய மரணம் நிகழ்கிறது. திறமையற்ற அரசாங்கம், திறமையற்ற முதல்வர் இவர்.
உளவுத்துறை என்ன செய்கின்றது?
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை நடந்த 200 மீட்டர் தூரத்தில்தான் காவல்நிலையம் உள்ளது. அந்த பகுதியில்தான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளது. மக்கள் அதிகம் நடமாடும் அந்த பகுதியிலேயே கள்ளச்சாராயம் விற்பனை நடந்து உள்ளது எனில், உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருக்கின்றது.
இப்படிப்பட்ட மரணங்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். இன்னும் சிகிச்சை பலனில்லாமல் எவ்வளவு பேர் உயிரிழப்பார்கள் என்று தெரியவில்லை.
மாவட்ட ஆட்சியர் மீது குற்றச்சாட்டு
மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களும், மருத்துவர்களும் இல்லை. ஹோமி பெசோல் என்ற மருந்துதான் சாராய விஷத்தை குணப்படுத்தும் மருந்து, ஆனால் இந்த மருந்து அரசிடம் இல்லை. நேற்றைய தினம் பொதுப்பணித்துறை அமைச்சர் பொய் சொல்கிறார். கடந்த 19ஆம் தேதி அன்று 3 பேர் இறந்து உள்ளனர். அவர்கள் வயிற்று வலி மற்றும் வயது முதிர்வு, வலிப்பு வந்து இறந்ததாக மாவட்ட ஆட்சியர் கூறி உள்ளார்.
டாபிக்ஸ்