தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  R. N. Ravi: ராஜ்பவனை முற்றுகையிட எங்கிருந்து உரிமை வந்தது-கிருஷ்ணசாமி ஆவேசம்

R. N. Ravi: ராஜ்பவனை முற்றுகையிட எங்கிருந்து உரிமை வந்தது-கிருஷ்ணசாமி ஆவேசம்

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 08, 2023 10:46 AM IST

இவர்கள் பேச, எழுத, தேர்தலில் போட்டியிட, வெற்றி பெற, பதவிகளை அனுபவிக்க வசதியாக அரசியல் சாசன உண்மைகளைப் பற்றிப் பேசுவார்கள்.

கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி

ட்ரெண்டிங் செய்திகள்

"சென்னை ராஜ் பவன் தர்பார் ஹாலில் நடைபெற்ற குடிமை பணி தேர்வர்களுடனான கலந்துரையாடலின் போது "ஆளுநர்களின் அதிகாரம்" பற்றிய கேள்வி ஒன்றுக்கு ஆளுநர் அளித்த பதில் மீண்டும் விவாதமாக்கப்பட்டுள்ளது?? சர்ச்சையாக்கப்பட்டுள்ளது? பெரும் பேசு பொருளாகியுள்ளது.

ஆளுநர்கள் என்றாலே "ராஜ்பவனுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டும்; ஆண்டுக்கு இருமுறை சட்டமன்றத்தில் சம்பிரதாயிரத்திற்காக உரை நிகழ்த்த வேண்டும்; குடியரசு தின விழாவில் கொடி ஏற்ற வேண்டும்" என்று மட்டுமே தமிழகத்தில் தவறான பார்வை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தை ஆழ்ந்து படிப்போர் அவ்வாறு கருத மாட்டார்கள்.

பாரத தேசத்தில் மூலைமுடுக்கெல்லாம் பரந்து கிடக்கக்கூடிய மக்களுக்கான அடிப்படை உரிமைகள் தேவைகள் முறையாகவும் சரியாகவும் கொண்டு செல்வதற்காகவும்; அரசியல் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவியாமல் பரவலாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயும் மாநிலங்களாக, மாவட்டங்களாக, ஊராட்சிகளாக நிர்வாக பிரிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.

சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற ஆளுமை பதவிகளுக்கு வரும் தேர்வர்கள் "இந்திய அரசியல் சாசனம், ஜனாதிபதி அதிகாரங்கள், ஆளுநர் அதிகாரங்கள், மத்திய மாநில அரசுகளின் உறவுகள், அதிகார வரம்புகள்" குறித்து எழுப்பிய கேள்விக்கு "ஆளுநரின் உச்சபட்ச பொறுப்பே அரசியல் சாசனத்தை கட்டி பாதுகாப்பது' என்பதையும்; மத்திய அரசோ, மாநில அரசோ எதுவாயினும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும் எனவும் தெளிவாக ஆளுநர் அவர்கள் விளக்கியுள்ளார். ஆளுநரின் அதிகாரமும், செயல்பாடுகளும்அரசியல் அமைப்போடு பின்னிப்பிணைந்தது என தெளிவு படுத்துகிறார். எனவே ஆளுநர் மாணவர்கள் உடனான உரையாடலின் போது அரசியல் சாசனம் குறித்து விளக்கம் அளித்த ஒரு நிகழ்வை ஆளும் கட்சியும், அதன் கூட்டணி கட்சியினரும் அரசியல் கோணத்திலிருந்து அணுகுவது எவ்விதத்தில் நியாயம்??

"அரசியலமைப்பில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ள அதிகாரங்கள் என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஏழாவது அட்டவணையில் மத்திய, மாநில அரசுகள் குறித்த சட்டங்கள்; மத்திய அரசின் அதிகாரம் என்ன; மாநில அரசு என்னென்ன சட்டங்கள் இயற்றலாம்; ஒத்திசைவு பட்டியலில் உள்ள விஷயத்தில் மத்திய அரசு சட்டமியற்றலாம்; மத்திய அரசு சட்டம் இயற்றியிருக்காவிட்டாலும் கூட மாநில அரசு சட்டம் இயற்றலாம். ஆனால் மத்திய அரசின் சட்டத்திற்கு இசைவாக இயற்றப்பட்டிருக்க வேண்டும் போன்றவை தெளிவாக உள்ளன" என இந்திய அரசியல் சாசன சரத்துக்களிலிருந்து ஆளுநர் விளக்கியுள்ளார்.

அதாவது. ஒரு மாநில அரசு சட்டம் இயற்றுகின்ற பொழுது முதலில் அதனுடைய அதிகார எல்லை எது என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அந்த தெளிவில்லாமல் அரசியல் ரீதியாக பொதுமக்களைத் திருப்திப்படுத்துவதற்காக ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அந்த சட்டம் செல்லுபடி ஆகுமா? இல்லையா? என்பதை முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு மட்டுமே உள்ளது என்பதைக் கோடிட்டு காட்டியுள்ளார்.

மாநில அரசு தனக்கு பெரும்பான்மை இருக்கின்ற ஒரே காரணத்திற்காக எந்த சட்டத்தை வேண்டுமென்றாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம்; அதற்கு இயந்திரத்தனமாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிக மிக தவறானது. அதுபோல

கடந்த காலங்களில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எத்தனையோ மசோதாக்கள் சட்ட வடிவம் பெறாமலேயே காலாவதியாய் இருக்கிறது.

கடந்த சில வருடங்களாக சில முக்கிய அம்சங்கள் குறித்து சட்டமன்றத்தில்

நிறைவேற்றப்பட்டு மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதில் 'நீட் தேர்வு தடை' குறித்த தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்திற்கு முதல் முறை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே மீண்டும் ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினார்கள். இரண்டாவது முறை நிராகரிக்காமல் மசோதாவை ஜனாதிபதி மற்றும் உள்துறைக்கு பரிந்துரை செய்துள்ளார். நீட் தேர்வை பொருத்தமட்டிலும் இந்திய தேசிய மருத்துவ கழக ஆலோசனையின் பெயரில், உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்ட ஒன்று. அந்த சட்டம் இந்தியா முழுமைக்கும் அமலில் உள்ளது. எனவே, நீட் தேர்வு குறித்த மத்திய அரசின் சட்டம் அமலில் இருக்கின்ற பொழுது, அதற்கு எதிரான இன்னொருச் சட்டத்தை ஒரு மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்ற இயலாது என்பது நன்கு தெரிந்தும் விடாப்பிடியாக தாங்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த ஒரு தவறான வாக்குறுதியை நிறைவேற்றுவதாக மக்களை ஏமாற்ற சட்டத்திற்கு புறம்பாக ஒரு மசோதாவைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி, எத்தனை முறை அனுப்பினாலும், அதை ஆளுநரால் எவ்வாறு அங்கீகரிக்க இயலும்? அல்லது ஜனாதிபதியால் எப்படி தான் அங்கீகரிக்க இயலும்? நீதிமன்றம் தான் எப்படி

ஏற்றுக்கொள்ளும்?

அதேபோல, "ஆன்லைன் ரம்மி தடை செய்யும் சட்டத்தை இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உட்பட்டது” எனக் குறிப்பிட்டு அதைத் திருப்பி அனுப்பினார். அதே மசோதாவை ஆளுநர் குறிப்பிட்ட எவ்வித திருத்தத்தையும் மேற்கொள்ளாமல மீண்டும் சட்டமன்றத்தால் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறார்கள். இரண்டாவது முறை சட்டமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால் ஆளுநர் அதற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். எனவே ரம்மி தடைச் சட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்கவும் வாய்ப்புண்டு. எனவே, ஒருவேளை மத்திய அரசின் வரம்பிற்குட்பட்டது என ஆளுநர் கருதுவாரேயானால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவும் வாய்ப்பு உண்டு. இதுவே இன்றைய தமிழக அரசின் மசோதாக்கள் மீதான நிலை.

ஜனாதிபதியோ, ஆளுநரோ, மாநில சட்டமன்றமோ, இந்திய நாடாளுமன்றமோ இந்திய அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும் என்பதை அவர் விளக்கியுள்ளார். அரசியல் சாசன விதிகளை ஆளுநர் விளக்கியதற்கு குதர்க்கமாக விளக்கங்களைக் கொடுப்பதும், உடனடியாக ஆளுநருக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு போராடுவதும் ஜனநாயக நடைமுறைகளா?

இவர்கள் பேச, எழுத, தேர்தலில் போட்டியிட, வெற்றி பெற, பதவிகளை அனுபவிக்க வசதியாக அரசியல் சாசன உண்மைகளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், அவர்களின் அரசியல் சாசன வரம்பு மீறிய செயல்களை ஆளுநர் கண்காணித்தால், தவறுகளை சுட்டிக் காட்டினால், தவறுகளுக்கு உடந்தையாக இல்லையென்றால், ராஜ்பவன் முற்றுகையாம்?? இவர்களுக்கு இதற்கெல்லாம் எங்கிருந்து இந்த உரிமை வந்தது? யார் கொடுத்தது??" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்