தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kodanad Case: சிபிசிஐடி கோரிக்கை ஏற்று வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

Kodanad Case: சிபிசிஐடி கோரிக்கை ஏற்று வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 27, 2023 02:30 PM IST

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் தகவல் பெற வேண்டும் என்ற சிபிசிஐடி போலீஸாரின் கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணைய ஒத்தி வைத்து நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஒத்தி வைத்து நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு
கொடநாடு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஒத்தி வைத்து நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு

ட்ரெண்டிங் செய்திகள்

சிபிசிஐடி தரப்பில் விசாரணை அலுவலரான ஏடிஎஸ்பி முருகவேல், டிஸ்பி சந்திரசேகர், அண்ணாதுரை ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி முருகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து சிபிசிஐடி போலீஸார் தகவல் பெற வேண்டியுள்ளதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் கோரப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி முருகன், வழக்கை வரும் பிப்ரவரி 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், "கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசார் தலைமையில் நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பாக இதுவரை 48 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் நடந்த சமயத்தில் பொறுப்பில் இருந்த அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பாவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எலக்ட்ரானிக் எவிடன்ஸ் மற்றும் செல்போன் உரையாடல்கள் குறித்து விசாரணை செய்வதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து சிபிசிஐடி போலீஸார் தகவல் பெற வேண்டியுள்ளது. எனவே கூடுதல் கால அவகாசம் வேண்டும் என நீதிபதியிடம் கேட்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கடந்த 2017ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண தாபா படுகாயம் அடைந்தார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த சில பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜூம் சாலை விபத்தில் உயிரிழந்தார். மேலும், கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக வேலை செய்து வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணையைத் தீவிரப்படுத்தும் விதமாக கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட 10 பேரை\ தவிர, வாகன விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபால், அவருடைய சித்தி மகன் ரமேஷ், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், சசிகலா, ஜெயா டிவி தலைமை செயல் அலுவலர் விவேக், முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உள்ளிட்டோரிடமும் விசாரணை நடந்தது.

இதையடுத்து கொடநாடு வழக்கு விசாரணை சிபிசிஐடி சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்திய 316 பேரிடம் இருந்து பெற்ற வாக்குமூலம் மற்றும் 3600 பக்க குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

IPL_Entry_Point