Senthil Balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்..நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்..நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு

Senthil Balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்..நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு

Karthikeyan S HT Tamil
Jan 29, 2024 04:02 PM IST

Senthil Balaji case: அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 17-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி (கோப்பு படம்)
அமைச்சர் செந்தில் பாலாஜி (கோப்பு படம்)

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனா். இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே 3 முறை தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (ஜன.29) முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக காணொலி வாயிலாக அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 17-வது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கு ஜனவரி 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை துவங்க கூடாது என்றும் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும், நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை தங்களுக்கும் வழங்கக் வேண்டும் எனக்கோரி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனுவையும் விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களுக்கும் பதில் அளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.  இதன்மூலம் 17வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 230 நாட்களை கடந்தும் ஜாமீன் கிடைக்காமல் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.