தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Evks Elangovan Said I Am Not Competing But My Son

Erode by-election: நான் போட்டியிடவில்லை ஆனால் என் மகன்? ஈவிகேஎஸ் இளங்கோவன் பளீச்

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 21, 2023 01:14 PM IST

ஈரோடு இடைத்தேர்தலில் மகனுக்கு வாய்ப்பு கேட்டுள்ளேன் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலில் நான் போட்டியிட வில்லை என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா எம்எல்ஏ மறைவை அடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அத்தொகுதியில் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது திமுக.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு யார் வேர்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் குடும்ப உறுப்பினர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் வேட்பாளராக அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நான் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் இளைஞர் ஒருவருக்கு தான் காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் என் இளைய மகனுக்கு வாய்ப்பு கேட்டுள்ளேன். காங்கிரஸ் தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் அத்தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் யுவராஜா போட்டியிட்ட நிலையில், வெறும் 8ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருமகனிடம் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட யுவராஜா முனைப்பு காட்டி வந்த நிலையில் நேற்றையதினம் ஜி.கே.வாசனை, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர், ஜெயக்குமாருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வெற்றிக்கு உழைப்போம் என தெரிவித்திருந்தார். தமாகா சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார்.

அதேசமயம் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 14 பேர் கொண்ட பாஜக நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டிருந்தார். அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக வேட்பாளரை நிறுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கமலாலயத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு அண்ணாமலையை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், " ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம் என்றார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கே முழு உரிமை உள்ளது. தேர்தல் சின்னத்தில் உள்ள பிரச்சனை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிட தயார் என்றார். கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோருவோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட விரும்பினால் ஆதரவு தருவோம் என்றார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்