Tamil Top 10 News: வயநாட்டில் மர்ம சத்தம் முதல் இந்திய எல்லையில் குவியும் வங்கதேச இந்துகள் வரை - டாப் 10 நியூஸ் இதோ..!
Evening Top 10 News: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் திடீர் மர்மசத்தம், ராகுல் காந்தியை சந்தித்த மனு பாக்கர், இந்திய எல்லையில் குவியும் வங்கதேச இந்துக்கள் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
Evening Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
வயநாடு மாவட்டத்தில் மர்ம சத்தம்
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தில் பூமிக்குள் இருந்து மர்ம சத்தம் கேட்டுள்ளது. வயநாட்டில் உள்ள மேப்பாடியில் காலை 10.15 மணிக்கு இந்த சத்தம் கேட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். வைத்திரி தாலுகாவில் அன்னப்பாறை, தாழத்துவயலில், பினாங்கோடு, நென்மேனியில் இந்த சத்தத்தை மக்கள் உணர்ந்தனர். கண்டத்தட்டு நகர்வதால் ஏற்படும் நிலஅதிர்வு அல்ல என்று தேசிய புவியியல் ஆய்வு மைய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமை (ஆக.10, 24) பள்ளிக்கல்வித்துறையின் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அறிவிப்பை ரத்து செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏர் இந்தியா அறிவிப்பு
இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்ததால், மறு அறிவிப்பு வரும்வரை இஸ்ரேலுக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
மூணாறு - கொச்சி நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
கேரளாவில் மூணாறு - கொச்சி நெடுஞ்சாலையில் கனமழையால் ராட்சத பாறைகள் உருண்டன. இதனால் அங்கு 5 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் போது வாகனங்கள் செல்லாததால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது குற்றவியல் நடவடிக்கை தொடர உத்தரவு
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. துணைவேந்தர் ஜெகநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை தொடர தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர் சட்டத்தின்படி, குற்றமிழைத்தவர் என அரசாணை வெளியிட்டு குற்றவியல் வழக்கு தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் 4 பேரை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்ததாக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகார் அளிக்கப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை கைது செய்தது செம்பியம் போலீஸ். ஏற்கனவே மற்றொரு கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரனை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாகேந்திரனின் மகன் வழக்கறிஞர் அஸ்வத்தாமன், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தியை சந்தித்த மனு பாக்கர்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் இன்று சந்தித்து பேசினார். பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 10 மீ. ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவு மற்றும் 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளார் மனு பாக்கர்.
ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து
கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கடும் துயரத்தில் இருந்து கேரள மக்கள் தற்போது வரை மீள முடியவில்லை. இதனால், பண்டிகையை எளிமையாக வீடுகளில் கொண்டாடுமாறும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகரம் நீட்டுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி வாழ்த்து
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய எல்லையில் குவியும் வங்கதேச இந்துக்கள்
வங்கதேசத்தில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக இந்திய எல்லையில் வங்கதேச இந்துக்கள் குவிந்து வருகின்றனர். வங்கதேச எல்லை அருகே உள்ள இந்தியாவின் பதன்துலியில் ஏராளமானோர் குவிந்து வருவதால் இந்திய எல்லையில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்