தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode Election: அதிமுக பாஜக இடையே தீவிரமடையும் உரசல்!பாஜக தலைவர்கள் படம் இல்லை?

Erode Election: அதிமுக பாஜக இடையே தீவிரமடையும் உரசல்!பாஜக தலைவர்கள் படம் இல்லை?

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 01, 2023 02:46 PM IST

அதிமுக தலைமை தேர்தல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கூட்டணியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பாஜக தலைவர்கள் படம் இல்லாத அதிமுக தலைமை தேர்தல் அலுவலக பேனர்
பாஜக தலைவர்கள் படம் இல்லாத அதிமுக தலைமை தேர்தல் அலுவலக பேனர்

ட்ரெண்டிங் செய்திகள்

இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிவிப்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 27.02.2023 அன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கே.எஸ்.தென்னரசு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா மறைவைத்தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன், அமமுக வேட்பாளராக சிவப்பிரசாத், தேமுதிக வேட்பாளராக ஆனந்த் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், சீட் கேட்பதில் கடுமையான போட்டி இருந்ததன் காரணமாகவே வேட்பாளர் அறிவிப்பு தாமதமானது. அனைவரிடமும் கலந்து பேசி வெற்றி வேட்பாளரை எடப்பாடியார் அறிவித்துள்ளார். நான்கரை ஆண்டுகாலம் அற்புதமாக ஆட்சி நடத்தில் பல்வேறு திட்டங்களை எடப்பாடியார் கொடுத்துள்ளார். ஈபிஎஸ் யாரை வேட்பாளரை அறிவித்தாலும் வெற்றி அதிமுகவிற்குதான் என்ற அடிப்படையில் நாங்கள் களத்தில் இருக்கிறோம்.

எதற்கும் லாயக்கு இல்லாத முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து எதையும் செய்யவில்லை. ஈரோடு கிழக்கில் தென்னரசு மட்டும் வேட்பாளர் அல்ல அதிமுகவினர் எல்லோருமே வேட்பாளர்கள்தான். எடப்பாடி பழனிசாமிக்கு முதல் வெற்றி ஈரோடு கிழக்கில் கிடைக்கும். ஒற்றுமையாக இருந்து வெற்றி பெற வேண்டும். பத்திரிகை ஊடகங்களில் வரும் செய்திகளை அதிமுகவினர் கண்டுகொள்ளாதீர்கள். ஊடகங்கள் மு.க.ஸ்டாலினை தூக்கிப்பிடிப்பதை நிறுத்தினால் இந்த ஆட்சி போய்விடும். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தென்னரசு வெற்றி பெறுவது உறுதி என்றார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டு அதிமுக தலைமை தேர்தல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில் பாஜக தலைவர்களின் படங்கள் இடம் பெறவில்லை. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரை தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று பெயர் மாற்றம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பாஜக அதிமுகவிடையே உரசல் நிலவுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியின் பெயரில் மாற்றம் செய்துள்ளது குறித்து உரிய நேரத்தில் பதில் அளிப்பேன்  என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்