தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji Vs Ed Raid: அசோக் எங்கே! செந்தில் பாலாஜி பெற்றோரிடம் அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி

Senthil Balaji vs ED Raid: அசோக் எங்கே! செந்தில் பாலாஜி பெற்றோரிடம் அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி

Kathiravan V HT Tamil
Feb 08, 2024 11:39 AM IST

”அமைச்சர் செந்தில் பாலாஜி கைதான நிலையில் விசாரணைக்கு ஆஜராக கோரி அசோக்கிற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது”

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார்
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார்

கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். கேரள பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்த 5 அதிகாரிகள் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ராமேஸ்வரப்பட்டியில் உள்ள இல்லத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும், பின்னர் உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரது நீதிமன்றக் காவல் இதுவரை 19 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி புதியதாக கட்டி வரும் வீட்டின் மதிப்பு, பரப்பளவு, செய்யப்பட்டுள்ள செலவுகள் குறித்தும், செந்தில் பாலாஜியின் நண்பர் நடத்தும் உணவகத்திலும் கடந்த ஜனவரி 11ஆம் தேதி அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் தற்போது கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் தந்தை வேலுச்சாமி மற்றும் பழனியம்மாள் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.  அதில் தலைமறைவாக இருக்கும் அசோக் குறித்தும், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும், அந்த வீட்டில் உள்ள படுக்கை அறை ஒன்றை சீல் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதான நிலையில் விசாரணைக்கு ஆஜராக கோரி அசோக்கிற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.