Annamalai: ’மதுரைக்கு கீழ் ஒரு சீட்டு கூட திராவிட கட்சிகளால் வெல்ல முடியாது!’ அண்ணாமலை சவால்!
”கூட்டணி இல்லாமல் ஒரு தேர்தலை கூட சந்தித்தது கிடையாது. திமுகவால் வரும் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட முடியும் என்று சொல்ல முடியுமா?”
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென் தமிழகத்தை நான் பார்த்து கொள்கிறேன் என பிரதமர் இன்று சொல்லி உள்ளார். இங்கிருந்து யாருமே எங்கேயும் வேலைக்கு செல்ல வேண்டாம். அந்த அளவுக்கு நான் வளர்த்து காட்டுகிறேன் என பிரதமர் கூறி உள்ளார். தென் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து பிரதமர் பேசி உள்ளது மிக மிக சிறப்பானது.
தூத்துக்குடி துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டினத்திற்கு கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி.
ராக்கெட் லாஞ்சிகிற்கு ஏற்ற இடம் தமிழ்நாடுதான். இன்றைக்கு அடிக்கல் நாட்டி உள்ளதால் மிக வேகமாக பணிகள் நடந்து இந்தியாவின் ராக்கெட்டுகள் ஏவப்படும்.
பிரதமரே திமுக என்றால் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவார்கள் என்று சொன்னார். அதுவும் சைனீஸ் ஸ்டிக்கரை ஒட்டி உள்ளார். விண்வெளித்துறையில் மிகப்பெரிய நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. ஆனால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீனக்கொடியை போட்டு விளம்பரம் கொடுத்துள்ளார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் சைனா என்ன எதிரிநாடா என கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதளம் தமிழ்நாட்டுக்குதான் வர இருந்தது. ஆனால் அண்ணா அமைச்சரவையில் இருந்த மதியழகன் குடித்துவிட்டு சதீஷ்தவான் கூட்டத்திற்கு வந்ததாக விஞ்ஞானி நம்பிநாராயணன் தனது புத்தகத்தில் எழுதி உள்ளார். இதனால்தான் அந்த ஏவுதளம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு சென்றது.
கனிமொழி அவர்கள் பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம். திமுகவின் விசுவாசம் சீனா மீதா அல்லது இந்தியா மீதா என விளக்க வேண்டும். கனிமொழி இந்த விவகாரத்தை ஆதரித்து பேசுகிறார்.
திமுக இதற்கு முன் 1991ஆம் ஆண்டில் 2 எம்.எல்.ஏக்களை வெற்றி பெற்றார்கள், 2019ஆம் ஆண்டு வெறும் 19 சதவீத வாக்குகளை பெற்றார்கள், திமுக கூட்டணி கட்சிகளை வைத்து வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். திமுக கூட்டணி இல்லாமல் ஒரு தேர்தலை கூட சந்தித்தது கிடையாது. திமுகவால் வரும் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட முடியும் என்று சொல்ல முடியுமா?. மதுரைக்கு கீழ் ஒரு சீட்டு கூட திராவிட கட்சிகள் வெல்லப்போவது கிடையாது. களம் மாறிவிட்டது.