Top 10 News : மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து விவகாரம்.. மதுரை சப்பரத் திருவிழா.. டிஜிட்டல் முறையில் மது விற்பனை!
சாலை விபத்தில் 2 சிறுமிகள் உயிரிழப்பு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.

மருத்துவர் பாலாஜியின் உடல் நலம் குறித்து தொலைபேசியில் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாலை விபத்தில் 2 சிறுமிகள் உயிரிழப்பு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
மருத்துவர் பாலாஜியின் உடல் நலம் குறித்து தொலைபேசியில் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை விக்னேஷ் கத்தியால் தாக்கியதில், மருத்துவர் படுகாயம் அடைந்ததை அடுத்து, அவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்துள்ளார்.
மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள், 45,000 மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இன்று நிறுத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுகிறது.