Top 10 News : மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம், தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல், ரயில்கள் ரத்து.. இன்றைய டாப் 10 நியூஸ்!
தாம்பரத்தில் இருந்து பிராட்வே, செங்கல்பட்டுக்கு கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படுகிறது, கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரம் என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
தாம்பரத்தில் இருந்து பிராட்வே, செங்கல்பட்டுக்கு கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படுகிறது,கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரம், ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகும் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம் - விக்னேஷ்க்கு ஜாமீன் மறுப்பு!
கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தில் கைதான விக்னேஷ்க்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
ரயில்கள் ரத்து -கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கம்
தாம்பரத்தில் இருந்து பிராட்வே, செங்கல்பட்டுக்கு கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படுகிறது. 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. பிராட்வே- தாம்பரத்திற்கு 10, தாம்பரம்- செங்கல்பட்டுக்கு 10 என கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கம்.
ஜனவரியில் வெளியாகிறது தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல்!
ஜனவரி முதல் வாரத்தில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கட்சியை சேர்ந்த ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், அணி தலைவர்களிடம் கருத்து கேட்டு செயலாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றி கழகத்தில் மொத்தம் 100 மாவட்டங்களாக பிரித்து மாவட்டச் செயலாளர்களை நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளை கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவு
வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க நாளை கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. கடந்த 1ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று நடக்கவிருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இன்றும் தொடர்ந்து 5வது நாளாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயர்ந்தது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,225-க்கும் பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ. 57,800-க்கும் விற்பனையாகிறது. இதனால் கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2320 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டம் கம்பத்தில் ஐயப்ப பக்தர்கள் வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து- சிறுவன் பலி
சேலம் ஓமலூரிலிருந்து மஞ்சுநாதன், சித்தார்த் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் 20ஆம் தேதி சபரிமலைக்கு கிளம்பி வந்துள்ளனர். சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்துவிட்டு நேற்றைய தினம் சொந்த ஊரை நோக்கி திரும்பி வந்துள்ளனர். அவ்வாறு வந்து கொண்டிருக்கும் போது நேற்று நள்ளிரவு தேனி மாவட்டம் சாலையில் பயணித்துள்ளது. அப்போது கார் எதிர்பாராத விதமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து குறியீட்டு கம்பி மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணித்த 5 நபர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் சித்தார்த்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சித்தார்த் உயிரிழந்துள்ளான்.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - குளிக்க 3வது நாளாக தடை
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீரானதும் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மெயின் அருவி, பழைய குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
பட்டாபிராமில் டைடல் பார்க்கை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் வடபகுதியிலுள்ள நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு செல்லும் நோக்கத்துடன் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், 330 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
வாலிபால் வேர்ல்ட் பீச் ப்ரோ டூர் போட்டி - துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் வடநெம்மேலியில் நடைபெற்ற வாலிபால் வேர்ல்ட் பீச் ப்ரோ டூர் போட்டியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குக - ஓபிஎஸ்
கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
டாபிக்ஸ்