DMK vs ADMK: முதலில் ’பூத் கேப்சரிங்’ செய்தது யார்? புள்ளி விவரத்துடன் விளாசும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி!
அதிமுகவுக்கு தோல்வி பயம் மட்டுமல்ல, நாடாளுமன்றத் தேர்தலை போல் இந்த தேர்தலிலும் டெபாசிட் போய்விடும் என்ற பயம் அவர்களுக்கு உள்ளது என திமுக அமைப்பு செயலாளார் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்து உள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.
முதலில் ‘பூத் கேப்சரிங்’ செய்தது யார்?
அப்போது பேசிய அவர், ’தான் திருடி பிறரை நம்பாது’ என்ற பழமொழியை போல், அதிமுக ஆட்சியில் நடந்த ஒவ்வொரு தேர்தலையும் மக்கள் மறந்துவிட்டதாக நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு தேர்தலில் முதன்முதலில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 1992இல் நடந்த பரங்கிமலை கண்டோண்ட்மண்ட் தேர்தலில்தான் ’பூத் கேப்சரிங்’ என்ற கலாச்சாரத்தையே அதிமுகவினர் அரங்கேற்றினர்.
2001ஆம் ஆண்டு ஜெயலலிதா டான்சி வழக்கில் விடுவிக்கப்பட்ட உடன் உச்சநீதிமன்றத்தில் நான் மேல்முறையீடு செய்தேன். அதனை மனதில் வைத்துக் கொண்டு, சென்னைக்கு அருகே உள்ள ஆலந்தூரில் நடந்த நகர்மன்றத் தேர்தலில், என்னை தோற்கடிக்க ஜெயலலிதா சதி செய்தார். அந்த தேர்தலில் ’பூத் கேப்சரிங்’ செய்தார்கள். 2000 வாக்குகள் இருந்த இடத்தில் 2500 ஓட்டுக்களை அதிமுகவினர் போட்டார்கள்.
டெபாசிட் போய்விடும் என அதிமுகவுக்கு பயம்
இந்தியாவில் உள்ள தேர்தல் ஆணையம் யாருடய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டிலே எந்த கலவரமும் இல்லாமல் நடந்து முடிந்தது.
அதிமுகவுக்கு தோல்வி பயம் மட்டுமல்ல, நாடாளுமன்றத் தேர்தலை போல் இந்த தேர்தலிலும் டெபாசிட் போய்விடும் என்ற பயம் அவர்களுக்கு உள்ளது. எதையும் சந்திக்கும் ஆற்றல் எங்களுக்கு உள்ளது. வன்னிய பெருமக்களுக்கு கலைஞர் அவர்கள் செய்தது போல் யாரும் செய்யவில்லை. அவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியதே கலைஞர்தான். ஆயிரம் ராமதாஸ்கள் இருந்தாலும், இதயம் படைத்த வன்னியர்கள் திமுகவுக்குதான் வாக்கு அளிப்பார்கள். மக்கள் பாமகவை கைக்கழுவிவிட்டார்கள், அவர்களுக்கு சின்னமே போய்விட்டது.
தேர்தலை சட்டரீதியாக சந்திக்கிறோம்
அதிமுக ஆட்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் 60 சதவீத இடங்களில் நாங்கள்தான் வெற்றி பெற்றோம். எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக உள்ள இளங்கோவன் முடிவுகளையே மாற்றி மாற்றி அறிவித்தார். நாங்கள் சட்டரீதியாக தேர்தலை சந்தித்தோம். தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை என்று சொல்வது மறைமுகமாக மோடியை தாக்குவதாக உள்ளது. இந்த தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம்தான் நடத்துகின்றது என ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக
முன்னதாக விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை புறக்கனிப்பதாக அதிமுக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “"அராஜகம் என்றால் திமுக; திமுக என்றால் அராஜகம்". திமுக-வினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள். அவ்வாறாக, கடந்த காலங்களில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதன் காரணமாக, 18.8.2009 அன்று நடைபெற்ற இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும்; 27.2.2009 அன்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் உட்பட திமுக ஆட்சியில் நடைபெற்ற இடைத் தேர்தல்களையும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புறக்கணித்தார்கள். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.” என கூறி உள்ளார்.