Modi Vs DMK: ’என் பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை!’ விளாசும் கனிமொழி!
”அந்த போஸ்டரை டிசைன் செய்தவர்கள் அதை போட்டுள்ளனர். சீன பிரதமரை நமது பிரதமர் மகாபலிபுரத்தில் சந்தித்து பேசி உள்ளார். அப்படி உள்ள நிலையில், சீனாவை எதிரிநாடு என அறிவிக்கவில்லை”
திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் திமுகவை விமர்சித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இந்த நிலையில் பிரதமர் அடிக்கல் நாட்டிய குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள விழாவில் கலந்து கொண்ட பின்னர் சென்னை திரும்பிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
கேள்வி:- திமுக காணாமல் போய்விடும் என பிரதமர் மோடி கூறி உள்ளாரே?
திமுக காணமல்போய்விடும் என்று சொல்லிய பலரை நானும் பார்த்துள்ளேன். ஆனால் அவர்கள்தான் காணாமல் போய் உள்ளார்களே தவிர திமுக காணாமல் போகவில்லை.
கேள்வி:- குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் திமுக கோரிக்கை என சொல்கிறீர்களே?
பிரதமர் மன்மோகன் சிங் இருந்தபோதில் இருந்து இந்த திட்டத்தை கொண்டு வர கலைஞர் அவர்கள் கடிதம் எழுதி இருந்தார்கள். அதுமட்டுமின்றி தொடர்ந்து பலமுறை நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி எழுப்பி உள்ளது. அமைச்சர்களை சந்தித்துள்ளோம், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். மேலும் இந்த திட்டத்திற்கு நிலத்தை சீக்கிரம் வழங்க முதலமைச்சர் துரிதப்படுத்தி நிலத்தை கொடுத்தார்.
இதுமட்டுமின்றி பட்ஜெட்டில் ஸ்பேஸ் கிராப்ட் தொழிற்சாலைகள் கொண்டுவர 2 ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேறு எந்த இடத்தலும் இந்த திட்டத்தை சிறப்பாக கொண்டு வர முடியாது. ராக்கெட்டை ஏவ இதுதான் சரியான இடம் என்று அறிவியல் பூர்வமாக விஞ்ஞானிகள் கணக்கு செய்து அறிவித்துள்ளனர்
கேள்வி:- திமுக சார்பில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் சீனக் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குற்றம்சாட்டி உள்ளாரே?
அந்த போஸ்டரை டிசைன் செய்தவர்கள் அதை போட்டுள்ளனர். சீன பிரதமரை நமது பிரதமர் மகாபலிபுரத்தில் சந்தித்து பேசி உள்ளார். அப்படி உள்ள நிலையில், சீனாவை எதிரிநாடு என அறிவிக்கவில்லை.
கேள்வி:- குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவில் உங்கள் பெயரை பிரதமர் மோடி குறிப்பிடவிலையே?
மேடையில் கூட தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர் எ.வ.வேலு பெயரையும், நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள எனது பெயரையும் சொல்ல பிரதமருக்கு மனமில்லை. இந்த திட்டத்தில் எங்களுக்கும் உரிமை உள்ளது. தலைவர் கலைஞர் அவர்களின் கனவுத்திட்டம் இது. எங்கள் பெயரை குறிப்பிடாதது அவர்களுக்கு தெரிந்த நாகரீகம்.
கேள்வி:- தமிழக மக்கள் பாஜக பக்கம் வருவதாக பிரதமர் கூறி உள்ளாரே?
எனக்கு தெரிந்து அப்படி நிச்சயமாக இல்லை; மதத்தை வைத்து அரசியல் செய்யும் பாஜகவை தமிழ்நாடு மக்கள் புரிந்து கொண்டவர்கள். அரசியல் வேறு; மதம் வேறு என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள் தமிழ்நாடு மக்கள்.
கேள்வி:- நாடாளுமன்றத்தில் அயோத்தி ராமர் கோயில் விவாதத்தில் திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளாரே?
அயோத்தி கோயில் கட்டுவதை பற்றி யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை; அதை அராசாங்கத்தின் சாதனையாக எப்படி சொல்ல முடியும், அந்த கோயிலை அரசாங்கம் கட்டவில்லை, ஒரு ட்ரஸ்ட்தான் கட்டி உள்ளது. வெளிநடப்பு எனது கோயிலுக்கு எதிரானது அல்ல; பாஜக பேசும் விஷயங்களுக்கு எதிரானதுதான்.