காவலாளியை தாக்கிய குடும்பத்தினர்..போலீசாரை ஆபாசமாக பேசி ஜோடிக்கு சிறை - டாப் 10 செய்திகள் இன்று
நோ என்ட்ரியில் வந்ததை தடுத்து நிறுத்திய காவலாளி தாக்கிய குடும்பத்தினர், போலீசாரை ஆபாசமாக பேசி ஜோடிக்கு சிறை, தீபாவளி சிறப்பு பேருந்துகள், பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றி விரட்டிய விவகாரம் குறித்து அமைச்சர் சேகர் பாபு விளக்கம் உள்ளிட்ட டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
அரசியல், குற்றம், வானிலை நிலவரம் உள்பட தமிழ்நாட்டின் இன்ற டாப் 10 செய்திகள் பற்றி பார்க்கலாம்
காவலாளியை தாக்கியவர்கள் தேடும் பணி தீவிரம்
மாமல்லபுரத்தில் நோ என்ட்ரி வழியே சென்ற காரை தடுத்த காவலாளியை சரமாரியாக தாக்கிிய 2 பெண்கள் உள்பட நான்கு பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரமணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் உலா வரும் விடியோ ஆதாரங்களை வைத்து அவர் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசாரை ஆபாசமாக திட்டிய ஜோடிக்கு சிறை
சென்னை மெரினா சாலையில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரரை ஆபாசமாக திட்டி சண்டை போட்ட ஜோடியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெயர் சந்திரமோகன் - தனலட்சுமி என்று தெரியவந்தது.இதில் கைதான ஜோடி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே சந்திரமோகன் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டு விடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். இதையடுத்து இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 15 நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை இருக்கும் கோயில் அடிவாரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.
கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்புகளைத் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதக்கப்பட்டுள்ளது.
கனமழை - மஞ்சள் எச்சரிக்கை
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 4 நாள்கள் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழன் இருக்கும் வரை தமிழையும், தமிழனையும், திராவிடத்தையும் பிரிக்க முடியாது - உதயநிதி பேச்சு
முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது "புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர். நேரடியாக அது முடியவில்லை என்பதால், தற்போது தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்குகிறேன் என்று நினைத்து மண்ணை கவ்வியுள்ளார்கள். ஏற்கெனவே, அண்ணா சூட்டிய தமிழ்நாடு எனும் பெயரை மாற்றப்போகிறேன் என்று ஒருவர் நினைத்தார். இதற்கு சிலபேர் துணை போக முயன்றனர். தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடைசியில் மன்னிப்பு கேட்டார்.
திமுக-வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தமிழையும், தமிழனையும், திராவிடத்தையும் பிரிக்க முடியாது. தொட்டுக் கூட பார்க்க முடியாது. இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருநாளும் ஏற்காது.
நான் சொல்லாததை பொய்யாக திருத்தி என் மீது வழக்கு போட்டுள்ளனர். நான் சொன்னால் சொன்னதுதான், நான் கருணாநிதியின் பேரன், யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன்" என தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி செயலாளர் விலகல்
நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். " நாம் தமிழர் கட்சியில் இதுநாள் வரை நான் செய்த செயல்கள், உடல் உழைப்பு, பண விரயம் இவை அனைத்தையும் சீமான் பொருட்படுத்தும்படி இல்லை. மேலும் கடைசியாக நடந்த நிகழ்வில்கூட அவர், சொன்ன வார்த்தைகள் எனக்கு மனவேதனையை அளித்தது. எனவே நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினராகவும் விலகுகிறேன். இதை நான் மனவருதத்துடன் தெரிவிக்கிறேன்" என கூறியுள்ளார்.
முன்னதாக, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் ஆகியோர் கடந்த சில வாரத்திற்கு முன்பு கட்சியில் இருந்து விலகினர். இவர்களை தொடர்ந்த மத்திய மாவட்ட செயலாளரும் விலகியுள்ளார்.
90 நாள்கள் கெடாத பால் நிறுத்தம்? ஆவின் விளக்கம்
ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் 90 நாள்கள் வரை கெடாத பால், மக்களின் தேவைக்கு ஏற்ப விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த பாலில் 3 சதவீதம் கொழுப்பு, 8.5 சதவீதம் இதர சத்துக்கள் உள்ளன.
தற்போது இந்த பால் பாக்கெட்டுகள் 450 மற்றும் 150 மில்லி அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருவதுடன், 40 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் கையிருப்பு இருக்கின்றன. எதிர்வரும் மழைக்காலங்களில் இந்த பால் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய அனைத்து பாலகங்களிலும் போதுமான அளவு பால் பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே 90 நாள்கள் கெடாத பால் பாக்கெட்டுகள் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு 14, 086 சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் சிவசங்கர்
தீபாவளி பண்டிகையையெட்டி 14, 086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து 11, 176 மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து 2,910 பேருந்துகள் இயக்கப்படும். 5.83 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 12,606 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரான நடிகை கெளதமி
அதிமுக கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளரக நடிகை கெளதமியை நியமித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றி விரட்டிய விவகாரம் - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
சுவாமிமலை முருகன் கோயில் வளாகத்தில் தூங்கிய பக்தர்களை கோயில் நிர்வாகிகள் தண்ணீர் ஊற்றி விரட்டியதாக இணையத்தில் பரவிய வீடியோ காட்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.
சுவாமிமலை கோயிலில் பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றப்படவில்லை. விழா காலங்களில் கோயில்களில் யாரும் தங்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது, "இரவில் நடை அடைக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு நாளும் இதுபோன்ற திருவிழா காலங்களில் சுத்தம் செய்வது ஏற்கனவே நடைமுறையில் உள்ள மரபுதான். அதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரவு அனைத்து பூஜைகளும் நடந்த பிறகு அடுத்த நாள் காலை பூஜை வழக்கம் போல் தொடங்க வேண்டும் என்பதற்காக தண்ணீர் பாய்ச்சி சுத்தம் செய்கின்ற பணிதான் நடைபெற்றது என்றார்.
ஏசி வேலை செய்யவில்லை - சேரன் எக்ஸ்பிரஸ் பாதி வழியில் நிறுத்தம்
சென்னை சென்டிரலில் இருந்து தினமும் இரவு 10 மணிக்கு இயக்கப்படும் சேரந் விரைவு ரயில் நேற்று இரவு புறப்பட தயாராக இருந்த நிலையில், ஏசி பெட்டியில் ஏசி வேலை செய்யவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் ரயில் நிர்வாகம் ஏசியை பழுது பார்க்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து ரயில் சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். உடனடியாக ரயில்வே அதிகாரிகள் வந்து விசாரணை நடத்திய நிலையில், ஏசி வேலை செய்யாதது குறித்து புகார் அளித்து நடவடிக்கை எடுக்காதது குறித்து குற்றம்சாட்டப்பட்டது. இதன் பின்னர் ஏசி பழுது செய்யப்பட்டு 55 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டது.