Redpix Felix Gerald : சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்! ரெட்பிக்ஸ் சேனலை இழுத்து மூட உத்தரவு!
Redpix Felix Gerald: சர்ச்சைக்குரிய நேர்காணலை ஒளிபரப்பு செய்த ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பெண் காவலர்கள் குறித்த அவதூறு செய்தியை ஒளிபரப்பிய புகாரில் கைது செய்யப்பட்ட ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய நேர்காணலை ஒளிபரப்பு செய்த ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சவுக்கு சங்கர் சிறையில் அடைப்பு
காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த வழக்கில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூ டியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் போலீசார் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியார் மீது திருச்சி மற்றும் கோவை சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் வீடுகளில் சோதனை
இந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் ஏற்கெனவே போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து ரெட்பிக்ஸ் பெலிஸ் ஜெரால்டு வசிக்கும் நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள வீடு மற்றும் ரெட்பிக்ஸ் நிறுவனம் இயங்கி வரும் அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்ட திருச்சி போலிசார் எலட்ரானிக் உபகரணங்கள் மற்றும் சில ஆவணங்களை எடுத்து என்றனர்.
ரெட்பிக்ஸ் நிறுவனம் மன்னிப்பு
இந்த நிலையில் பெண் காவலர்கள் குறித்த சவுக்கு சங்கரின் நேர்காணலை எடுத்தற்காக ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் மன்னிப்பு கேட்டு இருந்தது.
ஏற்கெனவே ஜாமீன் மறுப்பு
இந்த வழக்கில் அவரை ஜாமீனில் விடுவிக்க மறுத்து ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு ஃபெலிக்ஸ் ஜெரால்டு தாக்கல் செய்த மனுவில், நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
ஃபெலிக்ஸ் தரப்பில் கோரிக்கை
இந்த வழக்கில் ஏற்கனவே 80 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளதாகவும், சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைக்கமாட்டேன் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் ஃபெலிஸ் ஜெரால்ட் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவில் வழக்கறிஞர் மருதாச்சலம், உள்நோக்கத்துடன் இந்த கேள்விகளை மனுதார் கேட்டதாகவும். காவல்துறையில் உள்ள பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உயர் அதிகாரிகள் பெயர்களை குறிப்பிட்ட பேசியதாகவும் தொடர்ந்து இது போன்ற செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
ஜாமீன் கொடுக்க எதிர்ப்பு
சவுக்கு சங்கரை தூண்டும் வகையில் செயல்பட்டார் என எனவே ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே இதே போல் பேட்டியை ஒளிபரப்பிய வழக்கில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் வழங்கிய உத்தரவாதத்தை மீறி உள்ளதாகவும் எனவே சேனலை மூட உத்தரவிட வேண்டும் எனவும் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஜாமீன் தர கோரிக்கை
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான்சாத்தியன், கடந்த 80 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட அந்த கருத்திற்கும் தமக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை எனவும் இதற்காக மன்னிப்பு கோருவதாகவும் விசாரணை முடிவடைந்து விட்டதாகவும் இதுவரை 87 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. நீண்ட நாட்களாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என கூறினார்.
நீதிமன்றம் உத்தரவு
மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டார். இருதரப்பு வாதங களை கேட்ட நீதிபதி, சேனலை மூட வேண்டும் என்றும் இது குறித்து எந்த பேட்டியும் அளிக்க மாட்டேன் என்று நிபந்தனையுடன் பெலிக்ஸ் ஜெரால்டை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.