Cauvery water issue: 'தண்ணீர் தர முடியாதா!’ அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடகாவை விளாசிய முதல்வர் ஸ்டாலின்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cauvery Water Issue: 'தண்ணீர் தர முடியாதா!’ அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடகாவை விளாசிய முதல்வர் ஸ்டாலின்!

Cauvery water issue: 'தண்ணீர் தர முடியாதா!’ அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடகாவை விளாசிய முதல்வர் ஸ்டாலின்!

Kathiravan V HT Tamil
Jul 16, 2024 03:48 PM IST

Cauvery water issue: தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது

Cauvery water issue: தண்ணீர் தர முடியாதா! அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடகாவை விளாசிய முதல்வர் ஸ்டாலின்! (ANI Photo)
Cauvery water issue: தண்ணீர் தர முடியாதா! அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடகாவை விளாசிய முதல்வர் ஸ்டாலின்! (ANI Photo) (M.K.Stalin-X)

தினமும் ஒரு டிஎம்சி காவிரி நீரை தமிழகத்திற்கு தர காவிரி நீர் ஒழுங்காற்று வாரியம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு 8 ஆயிரம் கன அடி நீரை மட்டுமே தர முடியும் என கூறி உள்ளது. 

தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் 

இந்த நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக்கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடும் வகையில் நடைபெறும் இந்த அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்களே, சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களே, தலைமைச் செயலாளர் அவர்களே, அரசுச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களே, உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினையும், மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக் கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தை நாடியே நீரை பெற்றோம்

இதனை முறியடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி பல ஆக்கபூர்வமான கருத்துக்களை இங்கு நீங்கள் தெரிவித்து இருக்கின்றீர்கள்.

அதற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ்நாட்டுக்கு சட்டபூர்வமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கிடைக்க வேண்டிய நீரினைச் சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தை நாடித் தான் நீரைப் பெற்றோம்.

இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையிலும், கர்நாடகா அரசு இவ்வாறு நடந்து கொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுகளை நான் தீர்மானங்களாக இப்பொழுது படிக்கின்றேன்.

தீர்மானங்கள்

1. காவிரி நடுவர் மன்றம் 05-02-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், மாண்பமை உச்சநீதிமன்றம் 16-02-2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.

3. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின், மாண்பமை உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது. இந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சோடு மேற்கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும் என உறுதியளித்து, எனது உரையை நிறைவுசெய்கின்றேன்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.