MK Stalin Letter to All MLAs and MPs: ஈபிஎஸ் முதல் வானதி சீனிவாசன் வரை! முதல்வர் எழுதிய அவசர கடிதம்! விஷயம் தெரியுமா?
“முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” பொது மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருவதாகவும், 14,40,351 மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர் என்றும் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலை உணவுத் திட்டம் தொடர்பாக அனைத்து எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
முதலமைசர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள கடிதத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகிற 11-7-2024 அன்று, தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சியிலும், 15-7-2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட” விரிவாக்க நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, அவற்றைத் தொடங்கி வைக்கவுள்ளார்கள்.
அதேபோன்று, அன்றையதினம் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்புடைய அமைச்சர் பெருமக்களும் இந்நிகழ்வினைத் தொடங்கி வைக்கவுள்ளார்கள். இந்நிலையில், மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்து, மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளார்.
8.74 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுசேரும் வண்ணம் தன்னால் 18.12.2023 அன்று தொடங்கப்பட்ட மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்றும், அதன்மூலம் மொத்தம் 8.74 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுடன் முதல்வர்
நகரப்பகுதிகளில் இந்தத் திட்டத்திற்கு கிடைத்த வெற்றி மற்றும் வரவேற்பினையடுத்து, அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இதனை நடைமுறைப்படுத்திட திட்டமிட்டு, வருகிற 11-7-2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் தான் அதனைத் தொடங்கி வைக்கவிருப்பதாகவும், அன்றையதினம் விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தொடர்புடைய அமைச்சர் பெருமக்களும் இந்நிகழ்வினைத் தொடங்கி வைக்கவுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மக்களின் தேவைகளை நன்குணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் 11.07.2024 அன்று நடைபெற உள்ள “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்திட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
“முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”
அதேபோன்று, 15-9-2022 அன்று தன்னால் தொடங்கி வைக்கப்பட்ட “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” பொது மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், இந்தத் திட்டத்தின்கீழ் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருவதாகவும், 14,40,351 மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர் என்றும் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகுந்த வரவேற்புப் பெற்ற திட்டம்
அதேபோன்று, பல்வேறு ஆய்வுகளின் மூலமும், தமிழ்நாடு மாநில திட்டக் குழு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மதிப்பீடு செய்ததன் அடிப்படையிலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்புப் பெற்றுள்ளதோடு, சத்தான உணவினை வழங்குவதன் காரணமாக பள்ளிகளில் மாணாக்கர்களின் வருகையும் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், காலை உணவு தயாரிக்கும் நேரம் மற்றும் பொருட்செலவு மீதமாவதோடு மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் படிப்புத்திறன் அதிகரித்துள்ளதை கண்டு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்து வருவதா கிட்டக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
ஆதரவு தரக்கோரிக்கை
இந்தச் சூழ்நிலையில், ‘பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும் எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம்’ என்ற தமது அரசின் உன்னத நோக்கத்தை எய்திடும் வகையில், தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கும் இந்தத் திட்டத்தினை விரிவுபடுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான 15-7-2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில், தான் அதனைத் தொடங்கி வைக்கவுள்ளதாகவும், அன்றையதினம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிக்குட்பட்ட ஊரகப் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
11-7-2024 அன்று விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டங்களிலும்; மேலும் 15-7-2024 அன்று அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ள மேற்படி திட்டங்களின் விரிவாக்க நிகழ்ச்சிகள் தொடர்பாக உரிய அறிவுரைகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்நிகழ்வுகளில் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவும், ஆதரவினை வழங்கிடவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
Google News: https://bit.ly/3onGqm9