’இதுதான் பாஜகவின் பசப்பு அரசியல்’ இவ்வளவு நடந்து இருக்கா? பட்டியல் போட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!
அண்ணல் அம்பேத்கரை ஒன்றிய உள்துறை அமைச்சரே அவதூறுசெய்து - இழிவுபடுத்திப் பேசுவது பா.ஜ.க.வின் உயர்வர்க்க பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது. ஒருபுறம் அரசியல் சட்டத்திற்கு விழா - இன்னொரு புறம் அதை உருவாக்கித்தந்த அண்ணலுக்கு அவதூறு! இதுதான் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் ஆகும்.

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவுற்றுள்ளது. இக்கூட்டத் தொடரில் வீறுகொண்ட வீரர்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடளுமன்ற உறுப்பினர்கள் முழங்கி இருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளைப் பார்த்து நாடே வியந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நலனுக்காக குரல் கொடுப்பது - மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பி அவையின் கவனத்தை ஈர்ப்பது ஆகிய இரண்டையும் வெற்றிகரமாகச் செய்து காட்டி இருக்கிறார்கள். மற்ற மாநில எம்.பி.க்களுக்கு முன்னோடிகளாக கழக எம்.பி.க்கள் செயல்படுவதைப் பார்த்து - நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் தலைவராக நான் எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.
தி.மு.க. எம்.பி.க்கள் என்ன பேசுகிறார்கள் - நாட்டை உலுக்கும் முக்கியப் பிரச்சினைகளில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை இன்று நாடே உன்னிப்பாக கவனிக்கும் நிலைக்கு இந்த திராவிடப் பேரியக்கம் வளர்ந்திருப்பதை நினைத்தும் பெருமையாக இருக்கிறது.